ஜார்க்கண்ட் முதல்வரான ஹேமந்த் சோரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமானவராக கருதப்படும் சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டிருந்தார். போக்குவரத்து, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். நிலமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை, கைது செய்தபோது, சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பு வழங்கப்பட்டார்.
2 பிப்ரவரி 2024 முதல் 3 ஜூலை 2024 வரை ஜார்க்கண்டின் முதலமைச்சராக பதவி வகித்தார்.
ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டதும் மீண்டும் முதல்வர் பதவியை அவரே மீட்டுக்கொண்டார். இந்த நிலையில், சம்பாய் சோரன் பா.ஜ.க-வில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது ஜார்கண்ட் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், அரசியல் ஆர்வலர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் சம்பாய் சோரன் தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “நண்பர்களே, இன்றைய செய்தியைப் பார்த்த பிறகு, கோல்ஹான் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஏழை விவசாயியின் மகனை, இந்த நிலைக்கு கொண்டு வந்தது யார் என உங்கள் மனதில் பல கேள்விகள் எழும்…
எனது பொது வாழ்வின் தொடக்கத்தில் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக, தொழிலாளர்களுக்காக குரல் எழுப்பியது முதல், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா இயக்கம் வரை நான் எப்போதும் மக்கள் அக்கறை கொண்ட அரசியலையே முன்னெடுத்து வருகிறேன். மாநிலத்தின் பழங்குடியினர், ஏழைகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளைப் பெற முயற்சித்து வருகிறேன்.
நான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஜார்கண்ட் மாநிலத்தின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும், மக்களின் பிரச்னைகளை சரி செய்யவும் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
இதற்கிடையில், ஜார்கண்ட் மாநிலத்தின் 12-வது முதல்வராக பணியாற்ற கூட்டணி என்னை தேர்வு செய்தது. நான் பதவியேற்ற நாள்முதல் கடைசி நாள் (ஜூலை 3) வரை அரசுக்கான எனது கடமைகளை முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் செய்தேன். இந்த காலகட்டத்தில் பொதுநலன் கருதி பல முடிவுகளை எடுத்தோம். எனது ஆட்சிக் காலத்தில் நான் யாருக்கும் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது ஜார்கண்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்குக்கூட தெரியும்.
இதற்கிடையில், ஹல் திவாஸுக்கு அடுத்த நாள், அதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு எனது அனைத்து நிகழ்ச்சிகளும் கட்சித் தலைமையால் ரத்து செய்யப்பட்டது என்பதை அறிந்தேன். இது குறித்து கேட்டபோது, ‘ஜூலை 3-ம் தேதி சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அதுவரை உங்களால் முதல்வராக செயல்பட முடியாது’ எனக் கூறினார்கள்.
ஒரு முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் இன்னொருவரால் ரத்து செய்யப்படுவதை விட ஜனநாயகத்தில் அவமானகரமான செயல் வேறெதுவும் இருக்க முடியுமா?
இந்தக் கசப்பு மாத்திரையை விழுங்கிக் கொண்டிருந்தாலும், கடந்த 40 ஆண்டுகால எனது களங்கமற்ற அரசியல் பயணத்தில் முதல்முறையாக, உள்ளிருந்து உடைந்து போனேன். என்ன செய்வதென்று புரியவில்லை. இரண்டு நாட்கள், நான் அமைதியாக உட்கார்ந்து சுயபரிசோதனை செய்து, இதில் என் தவறைத் தேடிக்கொண்டிருந்தேன். எனக்கு அதிகார பேராசை கொஞ்சம் கூட இல்லை, ஆனால் என் சுயமரியாதை உண்டு…
பல ஆண்டுகளாக கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடத்தப்படாமல், ஒருதலைப்பட்சமாக உத்தரவு பிறப்பிக்கப்படும்போது, எனது பிரச்னைகளை யாரிடம் சென்று கூறுவது…
இந்தக் கட்சியில் நான் மூத்த உறுப்பினராக கருதப்படுகிறேன், மீதமுள்ளவர்கள் ஜூனியர்கள். என்னை விட சீனியரான முதல்வர் உடல் நிலை காரணமாக சில காலம் அரசியலில் ஈடுபடவில்லை… அவர் சுறுசுறுப்பாக செயல்பட்டிருந்தால், நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.
சட்டமன்றக் கட்சி கூட்டத்தை அழைக்க, முதலமைச்சருக்கு உரிமை இருந்தாலும், கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை கூட என்னிடம் தெரிவிக்கவில்லை. கூட்டத்தின்போது, என்னை ராஜினாமா செய்யும்படி கூறப்பட்டது. எனக்கு அதிகார பேராசை இல்லை என்பதால்உடனடியாக ராஜினாமா செய்தேன்.
ஆனால் என் சுயமரியாதையின் மேல் விழுந்த அடியால் என் இதயம் உணர்ச்சிவசப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக நான் எதிர்கொள்ளும் அவமானகரமான நடத்தையால், மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். நான் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன். ஆனால் அவர்கள் பதவியை பெறுவதில் மட்டுமே ஆர்வமாக இருந்தனர். என் முழு வாழ்க்கையையும் எந்த கட்சிக்காக அர்பணித்தேனோ அந்த கட்சியில் இனி எனக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை உணர்ந்தேன். இதற்கிடையில், இதுபோன்ற பல அவமானகரமான சம்பவங்கள் நடந்தன, அதை நான் இப்போது குறிப்பிட விரும்பவில்லை. இத்தனை அவமானங்களுக்கும், அவமதிப்புகளுக்கும் பிறகு, மாற்றுப் பாதையைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
கனத்த இதயத்துடன், அதே சட்டமன்றக் கூட்டத்தில் நான் சொன்னேன் ‘என் வாழ்வின் புதிய அத்தியாயம் இன்றிலிருந்து தொடங்கப் போகிறது. ஒன்று, அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது, இரண்டாவதாக, எனக்கென்று தனி அமைப்பை உருவாக்குவது, மூன்றாவதாக, இந்தப் பாதையில் எனக்கு ஒரு துணை கிடைத்தால், அவருடன் மேலும் பயணிப்பது. அதே நேரம், இது எனது தனிப்பட்ட போராட்டம். அதனால் எந்தக் கட்சி உறுப்பினரையும் இதில் ஈடுபடுத்தவோ, அல்லது இந்த அமைப்புக்கு தீங்கு விளைவிக்கவோ எனக்கு எந்த எண்ணமும் இல்லை. நாங்கள் எங்கள் ரத்தத்தாலும் வியர்வையாலும் வளர்த்த கட்சிக்கு தீங்கு விளைவிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் அவர் பா.ஜ.க-வில் இணைவது தொடர்பாக வெளிப்படையாக எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88