அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
81 வயதான அதிபர் பைடன், தனது பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி வந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போதும் தடுமாறினார். இது அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களையே அதிருப்தி அடைய செய்தது. அதன் காரணமாக அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டுமென எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில், தற்போது தேர்தலில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்.. தான் அதிபர் வேட்பாளராக கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட பிறகு கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தது சிறந்த முடிவு என குறிப்பிட்டுள்ளார். மேலும் இம்முறையும் தான் கமலா ஹாரிசை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள பைடடன் ஒன்றாக இணைந்து ட்ரம்பை வீழ்த்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.