அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆட்சியிலிருக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடனே (81) மீண்டும் போட்டியிடுவதாகக் கூறப்படும் நிலையில், அவரின் சொந்தக் கட்சியினரே சிலர் அவருக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். வயது முதிர்வு, சமீபகால பேச்சுகளில் தடுமாற்றம் போன்றவற்றைக் காரணமாகக் கூறுகின்றனர்.
சில நாள்களுக்கு முன்புகூட, முன்னாள் அதிபர் ட்ரம்ப் உடனான தொலைக்காட்சி விவாதத்தில் துடிப்பாகப் பேசவில்லை என பைடன் மீது விமர்சனங்கள் வந்தது. இந்த நிலையில், அதற்கேற்றவாறு மற்றுமொரு சம்பவமாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவர்கள் நாட்டின்மீது போர்தொடுக்கும் ரஷ்ய அதிபர் புதின் பெயரைச் சொல்லி பைடன் அழைத்திருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
முன்னதாக, வாஷிங்டனில் நேட்டோ (NATO) உச்சி மாநாட்டின் இறுதிநாள் கூட்டம் நடைபெற்றது. இதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர்களான பைடன், கமலா ஹாரிஸ் உட்பட நேட்டோ தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். உச்சி மாநாட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பைடன், “லேடிஸ் அண்ட் ஜென்ட்டில்மேன், அதிபர் புதின்” என ஜெலன்ஸ்கியை வரவேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த உலக தலைவர்கள் இதைக்கேட்டு தங்கள் முகங்களில் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர், தான் தவறாக உச்சரித்திருப்பதை உணர்ந்த பைடன், “அதிபர் புதின். அதிபர் புதினை நாங்கள் வீழ்த்தப்போகிறோம். புதினை வீழ்த்துவதில் நான் அதிக கவனம் செலுத்துகிறேன்” எனச் சமாளித்தார். இது நிகழ்ந்த அடுத்த சில நிமிடங்களில், “ட்ரம்ப் துணை அதிபராக இருக்கத் தகுதியற்றவராக இருந்தால், அவரை துணை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்” என கமலா ஹாரிஸை குறிப்பிட்டார் பைடன்.
இவ்வாறு ஒரே செய்தியாளர்கள் சந்திப்பில், அடுத்தடுத்து பைடன் குழம்பிப் பேசியிருப்பது அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவது குறித்து விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. அதிபர் தேர்தலில் பைடனின் போட்டியாளராகக் கருதப்படும் ட்ரம்ப், `கிரேட் ஜாப்’ என பைடனை விமர்சித்திருக்கிறார்.