எஸ்.ஆர்.சேகர், மாநிலப் பொருளாளர், பா.ஜ.க
“சினிமாவில் பேசுவதுபோல வசனம் பேசும் வசனகர்த்தா சீமான் போன்றவர்களின் பேச்சையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு பக்குவப்படாத அரசியல்வாதிக்கு எடுத்துக்காட்டாகவே விளங்கும் அவர், கொள்கை, மக்கள்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல், திரையில் பேசியதைவைத்தே இன்னும் வண்டி ஓட்டுகிறார். தேர்தல் முடிவுகள் வரட்டும். நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழப்பதையும், பா.ஜ.க பல தொகுதிகளில் வெற்றிபெறுவதையும் பார்க்கத்தான் போகிறீர்கள். எனவே, சொன்னபடியே கட்சியைக் கலைக்கப்போகிறாரா என எல்லோரையும்போல வேடிக்கை பார்க்கக் காத்திருக்கிறேன். 2016 சட்டமன்றத் தேர்தலின்போதும், ‘மக்கள் நலக் கூட்டணியைவிட அதிக வாக்குகள் பெறவில்லையென்றால், கட்சியைக் கலைப்பேன்’ என்றார். அதை நிறைவேற்றினாரா… ஒருவேளை கட்சியை அவர் கலைத்துவிட்டால், தமிழக அரசியல் களத்தில் கதைகளும் நகைச்சுவையும் காணாமல்போய்விடும். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு வீசப்போகும் ஆதரவு அலையில், நா.த.க-வே காணாமல்போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ‘உங்களுக்குச் சவால்விட துணிவிருக்கா?’ என எங்களைத் திரும்பக் கேட்கிறார்கள். நாங்கள் அவர்களைப்போல நாடகம் நடத்தவில்லை, அரசியல் செய்கிறோம்!”