Junior Vikatan – 18 August 2024 – சட்டமன்றத் தேர்தல்களை குறிவைத்தே வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை கொண்டு வருகிறதா மத்திய அரசு? | discussion about WAKF BOARD amendment bill

ஜி.கே.நாகராஜ்ஜி.கே.நாகராஜ்

ஜி.கே.நாகராஜ்

ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க

“நாட்டு மக்களுக்காக ஒரு நல்ல திருத்தத்தைக் கொண்டுவரும்போது அதை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளுக்கு வேலையாகிவிட்டது. ஏற்கெனவே, முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டுவந்தபோதும் இவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பா.ஜ.க கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்டத்தை இஸ்லாமியப் பெண்கள் கொண்டாடி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அதேபோலவே, இந்த வக்பு வாரிய சட்டத் திருத்தமும், இஸ்லாமிய மக்களுக்குப் பெருமளவில் பலனளிக்கும். தமிழகத்தில் எப்படி அறநிலையத்துறையின் மூலம் இந்துக்கள் பயன்பெறாமல், ஆளுங்கட்சியினர் மட்டும் பயன்பெறு கிறார்களோ… அதேபோல, வக்பு சொத்துகள் மூலம் ஒரு தரப்பினர் மட்டுமே பயன்பெறுகிறார்கள். அந்த நிலையை மாற்றி, அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் பலன் கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப் பட்டிருக்கிறது. ‘சிறுபான்மையினரின் பாதுகாவலர்’ வேடம் போடும் காங்கிரஸ், வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்திருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. முத்தலாக் முறைக்குத் தடையும் கொண்டுவர முன்வரவில்லை. அவர்களுக்குத் தேவை சிறுபான்மையினரின் வாக்குகள் மட்டுமே. பா.ஜ.க ஒருபோதும் வாக்கு அரசியல் செய்யாது. இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள்தான் இஸ்லாமிய மக்களுக்குத் துரோகம் செய்கின்றன என்றுதான் அர்த்தம்.”

ஹசீனா சையத்ஹசீனா சையத்

ஹசீனா சையத்

ஹசீனா சையத், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர்

“பா.ஜ.க-வின் சுயநல அரசியலைச் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் கே.சி.வேணுகோபால். மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதற்காக ஒவ்வொரு தேர்தலுக்கும், பா.ஜ.க ஒவ்வொரு மாதிரியான யுத்தியைக் கையிலெடுக்கும். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக புல்வாமா தாக்குதல், 2024 தேர்தலுக்காக ராமர் கோயில்போல, வரப்போகும் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலை மனதில் வைத்துக்கொண்டே வக்பு வாரிய சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். ‘இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான ஒரு வாரியத்தில் மாற்று மதத்தினரும் உறுப்பினர் ஆகலாம்’ என்று திருத்தம் கொண்டுவந்ததிலிருந்தே பா.ஜ.க-வின் அயோக்கியத்தனத்தைப் புரிந்துகொள்ள முடியும். இதேபோல, ‘ராமர் கோயில் நிர்வாகத்தில் மாற்று மதத்தினரை அனுமதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையைச் சிறுபான்மையினர் யாராவது முன்வைத்திருந்தால், இந்நேரம் அதை மதக்கலவரமாகவே மாற்றியிருப்பார்கள் பா.ஜ.க-வினர். தங்கள் அமைச்சரவையில் ஓர் இஸ்லாமியருக்குக்கூட வாய்ப்பு கொடுக்காத பா.ஜ.க-வுக்கு, சிறுபான்மையினரைக் கரித்துக்கொட்டுவதையே வழக்கமாக வைத்திருக்கும் பா.ஜ.க-வுக்கு இஸ்லாமிய மக்கள்மீது ஏன் இந்த திடீர் அக்கறை… நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கவும், பிரிவினையைத் தூண்டவும் பா.ஜ.க அரசு கொண்டுவரும் எந்தச் சட்டத்தையும், சட்டத் திருத்தத்தையும் நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *