Kangana: `அரசியல் அளவுக்கு திரை வாழ்க்கை கடினமல்ல…' – சொல்கிறார் கங்கனா ரனாவத் எம்.பி

கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க-வில் இணைந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 2024 மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கினார். அதைத் தொடர்ந்து, 73,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.பி-யாகத் தேர்வானார். இதற்கிடையில், பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்ததற்காக, சத்தீஸ்கர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரால் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரம் மூலம், அரசியல் அரங்கில் மீண்டும் பேசுபொருளானார்.

கங்கனா ரனாவத்

இந்த நிலையில், தி இமாச்சலி பாட்காஸ்டுக்கு (the Himachali Podcast) அவர் அளித்தப் பேட்டியில், “அரசியலில் சேருவதற்கு பல வாய்ப்புகள் வந்தன. அப்போதெல்லாம் அரசியலுக்கு வர இது சரியான நேரமில்லை என்றே கருதினேன். தற்போதுதான் சரியான நேரம் என்று உணர்ந்தேன். அதனால் பா.ஜ.க-வில் இணைந்தேன். எனது கொள்ளு தாத்தா சர்ஜு சிங் ரனாவத் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். எனவே அரசியல் என் குடும்பத்திற்கு தூரமானதில்லை. எனது முதல் படமான கேங்ஸ்டர் படத்திற்குப் பிறகு நான் அரசியலில் சேர நினைத்தேன்.

என் தந்தையும் சகோதரியும் பல ஆண்டுகளாக இதே போன்று அரசியலில் சேருவதற்கான அழைப்பை பெற்றிருக்கிறார்கள். நான் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றால், நான் உண்மையில் இவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டியதில்லை. திரைப் பிரபலத்தை விட ஓர் அரசியல்வாதியின் வாழ்க்கை மிகவும் கடுமையானது. இது ஒரு கடினமான வாழ்க்கை. அரசியல் திரைப்படங்களில் நடிப்பதைப் போலல்ல. நடிகர் என்றால், ஷூட்டிங் செட்டுக்குச் சென்றோமா, நடித்தோமா மீண்டும் வீட்டுக்கு வந்தோமா என நிம்மதியாக இருக்கலாம்.

கங்கனா ரனாவத் – ஜக்கி வாசுதேவ்

நடிகர்கள் மென்மையான வாழ்க்கை வாழ்கிறவர்கள். ஆனால், நான் இதைப் புரிந்து கொள்ளவே நீண்ட காலமானது. எனது குருவான ஜக்கி வாசுதேவிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்ற பிறகே அரசியல் பாதைக்கு வந்தேன். நமக்கு பிடித்ததைச் செய்வதுதான் புத்திசாலித்தனம். அதே நேரம் தேவையானதைச் செய்தால் மேதை ஆவீர்கள் என என் குரு கூறியிருக்கிறார்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *