Karunanidhi Coin: `100 ரூபாய் நாணயம், 10,000 ரூபாய்' – ஸ்டாலின் அறிவிப்பும் திமுக சொல்லும் காரணமும்!

கடந்த ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாகச் சென்னை, கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகக் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா

இந்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னையில் நடைபெற்ற பழம்பெரும் தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். அவரது நினைவு நாணயத்தை வெளியிட்டேன். நீதி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவரது வாழ்க்கைக்கு இது ஒரு புகழஞ்சலியாகும். இது நமது நன்றியுணர்வின் அடையாளமாகும். அவர் முன்வைத்த மதிப்புகளை நினைவூட்டும் செயல்பாடாகும். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த ஓராண்டுக் காலமாகக் கலைஞரின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பிலும்‌, கட்சியின்‌ சார்பிலும்‌, தனிப்பட்ட முறையிலும்‌ கொண்டாடிக்‌ கொண்டிருக்கிறோம்‌. தமிழ்நாட்டில்‌ மட்டுமல்ல, இந்தியாவில்‌ இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களிலும்‌, வெளிநாடுகளிலும்‌ கலைஞர்‌ கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைத் தொடர்ந்து கொண்டாடிக்‌ கொண்டு வருகிறோம்‌. இந்தியாவில்‌ இப்படிப்பட்ட விழா எந்தத்‌ தலைவருக்கும்‌ நடந்தது கிடையாது. இவ்வளவு சிறப்பான விழாக்கள்‌ நடத்தியிருக்கின்றோம்‌ என்று சொல்லும்‌ அளவிற்கு நாம்‌ நடத்திக்‌ கொண்டிருக்கிறோம்‌.

திமுக – ஸ்டாலின்

அது மட்டுமல்ல, தலைவர்‌ கலைஞர்‌ பெயரால்‌, கிண்டியில்‌ உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில்‌ பிரமாண்டமான நூலகம்‌, கிளாம்பாக்கத்தில்‌ அனைத்து வசதிகளும்‌ கொண்ட பேருந்து முனையம்‌ போன்ற எத்தனையோ பயனுள்ளவற்றை, கலைஞர்‌ பெயரால்‌ ஏற்படுத்தியிருக்கிறோம்‌. உதயநிதி சொன்னதுபோல, 1 கோடியே 15 லட்சம்‌ மகளிர் மாதந்தோறும்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ பெறக்கூடிய அளவிற்குக் கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌தொகைத்‌ திட்டம்‌… அதுவும்‌ கலைஞர்‌ பெயரில்‌தான் அமைந்திருக்கிறது. இதற்கெல்லாம்‌ மகுடம்‌ வைப்பதுபோல்‌, நடந்த நிகழ்ச்சி, நாணயம்‌ வெளியீட்டு விழா.

நாணயம்‌ அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார்‌ வேண்டுமானாலும்‌, எப்போது வேண்டுமானாலும்‌ சென்று ரூ.100 நாணயத்தைப் பெற்றுக்‌ கொள்ளலாம்‌. 100 ரூபாய்‌ நாணயம்‌தான்‌. ஆனால்‌ அதன்‌ மதிப்பு ரூ.10,000. யார்‌ வேண்டுமென்றாலும்‌ 10,000 ரூபாய்‌ கொடுத்து அறிவாலயத்தில்‌ சென்று அதைப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. ஏனென்றால்‌, காந்தி‌ நேற்று முன்தினம்‌ நடைபெற்ற மாவட்டச்‌ செயலாளர்‌ கூட்டத்தில்‌ `நான்‌ 1 லட்சம்‌ தருகிறேன்‌’ என்று சொன்னார்‌. அவர்‌ 1 லட்சம்‌ என்ன, 10 லட்சம்‌கூட கொடுத்து வாங்கிக்‌ கொள்வார்‌” என்றார். இதையடுத்து கருணாநிதி உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வாங்க தி.மு.க-வினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அண்ணா அறிவாலயம்

இதற்கு முன்பு திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, சி.சுப்பிரமணியம், தஞ்சை பெரிய கோயில், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது கருணாநிதி நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு நாணயத்தை வெளியிடுவதற்கு என சில விதிமுறைகளை மத்திய அரசின் நிதி அமைச்சக பொருளாதார விவகாரங்கள் துறை, பணம் மற்றும் நாணயப் பிரிவு உருவாக்கியிருக்கிறது. இதன்படி நாட்டில் புகழ்மிக்கவராகவும், கட்டாயம் இந்தியக் குடிமகனாகவும், புலம்பெயர்ந்து சென்றவராக இருந்தால் நாட்டின் புகழ் அல்லது முன்னேற்றத்திற்குக் குறிப்பிட்ட வகையில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளுக்குப் பொருத்தமான நபர் சார்ந்தவர்கள் மத்திய அரசிடம் முறையிடலாம். அதைப் பரிசீலனை செய்து தகுதியுடைய நபர் என முடிவு செய்யும் பட்சத்தில் இந்த நாணயம் வெளியிடப்படும். அதன்படிதான் கருணாநிதி நாணயம் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “நாணயம் 35 கிராம் எடை கொண்டது. இதில், சில்வர் – 50%, காப்பர் – 40%, நிக்கல் – 5%, சிங்க் – 5 % ஆகியவை இருக்கின்றன. இதைத் தயாரிப்பதற்கு ரூ.5,000 ஆகிறது. ஆனால் ரூ.10,000-க்கு விற்பனை செய்கிறோம். மொத்தமாக எவ்வளவு நாணயம் இருக்கிறது என்ற தகவல் முழுமையாக வெளியாகவில்லை. ரூ.10,000 கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றுதான் தலைவர் சொல்லி இருக்கிறார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *