தூய்மை தொழிலாளி ஜோய் மரணத்துக்கு ரயில்வே துறைதான் காரணம் எனவும், ரயில் நிலையத்தில் இருந்து அதிகப்படியான கழிவுகள் ஆமை இழஞ்சான் ஓடையில் விடப்படுவதாகவும் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் கூறியிருந்தார்.
அதேபோல ரயில்வே தரப்பில், “சம்பந்தப்பட்ட பகுதியில் ரயில்வேக்குச் சொந்தமான இடம் என்றால், வெறும் 100 மீட்டர் தூரம்தான். அதனால் எங்களால் அங்கு பெரிய அளவில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. இருப்பினும் இத்தகைய சம்பவத்துக்கு மாநகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம்” எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
அதே சமயம், “மழைக்காலத்துக்கு முன் ஓடைகளை சுத்தம்செய்ய தவறியது மாநகராட்சி நிர்வாகம். ஜோய் மரணத்துக்கு காரணமான மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்” என பா.ஜ.க மாநில தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். ஜோய் மரணம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜோய் மரணம் மிகவும் துக்ககரமானது. ஜோய் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். குடும்ப உறுப்பினர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக்கொள்கிறேன். ஜோய்யை மீட்க 46 மணிநேரம் பல்வேறு துறைகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. மனித சக்தியால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. போலீஸ், தீயணைப்புத்துறை முதல் கப்பற்படை வரை கை மெய் மறந்து பணிசெய்த அனைவருக்கும் நன்றி” என்றார்.