நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது. இதில், பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணி 370 – 400 வரையிலான இடங்களைக் கைப்பற்றும், தனிப்பெரும்பான்மையாக பாஜக 300 இடங்களைச் சுலபமாகத் தாண்டும், இந்தியா கூட்டணி 150 இடங்களைக்கூட தாண்டாது என்ற கருத்துக்கணிப்புகளை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பொய்யாக்கி வருகின்றன. இதுவரையிலான நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அதிலும், பாஜக தனிப்பெரும்பான்மைக்கான இடங்களைக்கூட தொடாமல் 240 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அதேசமயம், இந்தியா கூட்டணி 232 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
அதில், காங்கிரஸ் மட்டும் 99 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணி பாஜக கூட்டணியை பின்னுக்குத் தள்ளி 43 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இத்தகைய சூழலில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இது மக்களின் தீர்ப்பு. ஜனநாயகத்துக்கான வெற்றி மற்றும் மோடியின் அரசியல் தோல்வி. இன்னும் நாங்கள் எங்கள் கூட்டணி கட்சிகளிடம் எதுவும் பேசவில்லை. அதேபோல் பாஜக-விடம் கூட்டணி வைப்பவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பெரும்பான்மையை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். மேலும், எல்லா உத்திகளையும் இங்கே சொல்லிவிட்டால் மோடி சுதாரித்துக்கொள்வார்” என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “இந்தத் தேர்தலில் நாங்கள் பாஜக-வுக்கு எதிராக மட்டுமல்ல, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு எதிராகவும் போட்டியிட்டோம். ஏனெனில், இவையனைத்தையும் மோடி மற்றும் அமித் ஷா கைப்பற்றியிருந்தனர். கூட்டணிக் கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்துவோம். கூட்டணி கட்சிகளிடம் கேட்காமல் எந்த அறிக்கையும் வெளியிட மாட்டோம்.
உத்தரப்பிரதேச மக்கள், நாட்டின் அரசியலையும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் புரிந்து கொண்டு, அரசியலமைப்பைப் பாதுகாத்தனர். காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை ஆதரித்தவர்களுக்கு நன்றி. என்னை ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் வெற்றி பெறவைத்த வாக்காளர்களுக்கு நன்றி. நான் எந்த இடத்தை தக்கவைக்க வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கூறினார்.