மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி இடையே தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. கடந்த 2022-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்தபோது பா.ஜ.க-விற்கு 100-க்கும் அதிகமான எம்.எல்.ஏ-க்கள் இருந்தபோதிலும், வெறும் 40 எம்.எல்.ஏ.க்களுடன் சிவசேனாவில் இருந்து வெளியில் வந்த ஏக்நாத் ஷிண்டேவிற்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. இதில் தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனக்கு முதல்வர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவர் இறுதியில் துணை முதல்வராக்கப்பட்டார். தற்போது தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க முதல்வர் பதவியை கேட்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து பா.ஜ.க முத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் யாரையும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தமாட்டோம்.
சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்த மாநிலங்களிலும் பா.ஜ.க அது போன்றுதான் செயல்பட்டது. மகாராஷ்டிராவிலும் அதே முறைதான் பின்பற்றப்படும். பா.ஜ.க 160 தொகுதிகளில் போட்டியிடும். இவ்விவகாரத்தில் எந்த வித சமரசத்திற்கும் இடமில்லை. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் 160 தொகுதிகள் கேட்போம். எங்களால் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற முடியும். 100 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை கோருவோம்”‘ என்றார்.
ஆனால் சிவசேனா (ஷிண்டே) மூத்த தலைவர் இது குறித்து கூறுகையில், ”சிவசேனா இரண்டாக உடைந்ததால்தான் மகாயுதி கூட்டணியே உருவானது. எனவே எத்தனை தொகுதியில் வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியமல்ல. அதே சமயம் முதல்வர் பதவி விவகாரத்தில் எந்த வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. ஷிண்டே தொடர்ந்து முதல்வராக நீடிப்பார்” என்றார். அதேசமயம் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் நாங்கள் 100 தொகுதிகள் கேட்போம் என்றும், 80 தொகுதிக்கு குறைவாக வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது. ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் 100 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தற்போது பா.ஜ.க விற்கு சுயேச்சைகளை சேர்த்து 114 உறுப்பினர்கள் இருக்கின்றனர். சிவசேனா (ஷிண்டே)விற்கு 39 எம்.எல்.ஏ.க்களும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிக்கு 42 உறுப்பினர்களும் இருக்கின்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி வெறும் 17 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.கவிற்கு இத்தேர்தலில் வெறும் 9 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. அதனை காரணம் காட்டி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவிடம் அதிக தொகுதிகள் கேட்க சிவசேனா(ஷிண்டே) முடிவு செய்துள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி 225 தொகுதியில் வெற்றி பெறும் என்று சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மகாவிகாஷ் அகாடியிலும் உத்தவ் தாக்கரேயை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த அக்கட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதனை சரத் பவார் நிராகரித்துவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb