கேரள மாநிலத்தில், வாக்குறுதி அளித்தபடி, தனக்கு மணப்பெண் தேடித் தரவில்லை என கேரளா மேட்ரிமோனியல் நிறுவனத்தின் சேவைக் குறைபாடு குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நபருக்கு, ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018-ம் ஆண்டு கேரள மாநிலம், செர்தலாவைச் சேர்ந்த ஒருவர், கேரளா மேட்ரிமோனி இணையதளத்தில் தனது பயோடேட்டாவை பதிவு செய்துள்ளார். இதையடுத்து, குறிப்பிட்ட மேட்ரிமோனி நிறுவனப் பிரதிநிதி, அவரை வீடு மற்றும் அலுவலகத்தில் சந்தித்து, முதலில் ரூ.4,100 கட்டினால் மட்டுமே மணமகள்களின் பயோடேட்டாக்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரியும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வாக்குறுதியை நம்பிய புகார்தாரர் 2019-ம் ஆண்டு ஐனவரி மாதம் மேட்ரிமோனி நிறுவனத்திடம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தியுள்ளார்.
ஆனால், பணம் செலுத்திய பிறகு, மேட்ரிமோனி நிறுவனத்தை தொடர்பு கொள்ள அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. மேலும், மேட்ரிமோனி நிறுவனத்தினர் தெரிவித்தபடி, மணப்பெண்ணும் இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர், தான் செலுத்திய பணத்தை திருப்பித் தருமாறு மேட்ரிமோனி நிறுவனத்தை அணுக, அவர்களோ மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் தான் செலுத்திய கட்டணம் மற்றும் நிவாரணங்கள் வேண்டி, நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
இந்த மனுவுக்கு பதிலுரை தாக்கல் செய்த கேரளா மேட்ரிமோனி நிறுவனத் தரப்பினர், புகார்தாரர் தங்களது நிறுவனத்தின் “கிளாசிக் பேக்கேஜில்” பதிவு செய்துள்ளார். இதன் மூலம் பல மணப்பெண்களின் சுயவிவரங்கள் மற்றும் தகவல் தொடர்பு எண்களை அவர் தொடர்பு கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
எங்கள் நிறுவனம் ஒரு இடைத்தரகர் போல செயலாற்றும் நிறுவனம் மட்டுமே. எங்களது பணி, வாடிக்கையாளர்களுக்கு பொருந்தக்கூடிய சுயவிவரங்களின் தகவல்களை கண்டறிந்து வழங்குவது மட்டுமே. மேலும், இந்தத் தகவல்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களால் மட்டுமே பதிவேற்றப்படுகிறது. எனவே, இதில் எங்களது பங்கு என ஏதும் கிடையாது என வாதிட்டனர்.