நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், நேற்று மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ராகுல் காந்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியை மோடி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், இன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் சிலர் வேண்டுமென்றே இந்த சாதனையைப் பார்க்காமல், புரிந்துகொள்ளாமல், இந்த நாட்டு மக்கள் எடுத்த இந்த முக்கியமான முடிவை இருட்டடிப்பு செய்ய முயன்றனர். எங்களின் செயல்திறனுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறது இந்தியா. காங்கிரஸ் நண்பர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நாங்கள் 10 வருட ஆட்சியை முடித்துவிட்டோம், இன்னும் 20 ஆண்டுகள் உள்ளன.
10 ஆண்டுகளில், நாங்கள் அர்ப்பணிப்புடன் செய்த பணிக்கு, மக்களின் முழு ஆதரவும் ஆசீர்வாதமும் கிடைத்துள்ளது. என்னைப் போன்ற பலரின் குடும்பத்தில் ஒரு கிராம பஞ்சாயத்து தலைவரோ அல்லது கவுன்சிலரோ கூட இருந்ததில்லை. ஆனால் இப்போது முக்கிய பதவிகளில் நாட்டிற்கு சேவை செய்கிறார்கள். காரணம்… டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் எங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. மக்களும் அதை ஆமோதித்தனர்.
மக்களவையில் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று கூறியபோது, இன்று அரசியல் சாசனத்தின் நகல்களை கைகளில் ஏந்தியவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் தேர்தல், 10 ஆண்டுகால சாதனைக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்கான ஒப்புதலின் முத்திரையாகவும் உள்ளது. மக்கள் எங்களை மட்டுமே நம்பி இந்த வாய்ப்பை வழங்கியிருக்கின்றனர். நாங்கள் பொருளாதாரத்தை 10 வது இடத்தில் இருந்து 5 வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
இன்னும் முதல் மூன்று இடங்களுக்கு அதைக் கொண்டுவர முயற்சிக்கிறோம். ஆனால் இது எப்படி சாத்தியம் எனக் கேட்கிறார்கள். நாங்கள் கடின உழைப்பை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்தது பசியை போக்கியது மட்டும்தான். மெயின் கோர்ஸ் இப்போதுதான் தொடங்குகிறது. வரவிருக்கும் ஐந்தாண்டுகள் வறுமைக்கு எதிரான ஒரு தீர்க்கமான போராட்டத்தை தொடர்வோம்.” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் எனக் எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். அதற்கு சபாநாயகர் ஜக்தீப் தன்கர், “எந்த இடையூறும் இல்லாமல் பேச வாய்ப்பு கொடுத்தேன். ஆனால், தற்போது இடையூறு செய்யும் அவர்களின் நடத்தையை நான் கண்டிக்கிறேன். நாட்டு மக்கள் வருத்தப்படுவார்கள். அரசியலமைப்புச் சட்டத்தை அவமானப்படுத்தியதற்காக நான் வருத்தப்படுகிறேன். அவர்கள் இதை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,“உண்மையைக் கேட்க முடியாமல் அவர்கள் ஓடுகிறார்கள். எதிர்க்கட்சியினரால் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. நேற்றைய அவர்களின் செயல்பாடுகள் தோல்வியடைந்ததால் இன்று ஓடிவிட்டனர். கைத்தட்டல் பெறுவதற்காக நான் இங்கு வரவில்லை. நான் மக்கள் சேவகன், நான் அவர்களுக்கு என்ன தெரிவிக்க வேண்டும் என விரும்பினேனோ அதை தெரிவித்துவிட்டேன்.
எங்கள் அரசு செய்த பணிகள் குறித்து மக்களுக்கு விரிவாக எடுத்துரைப்பது எனது கடமை. பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி இந்தியா தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்று நாம் அதன் விளைவுகளை பார்க்கிறோம். பெண்களின் சுகாதாரம், ஆரோக்கியம் ஆகிய துறைகளிலும் பணியாற்றியுள்ளோம்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரூ.60,000 கோடி விவசாயிகளின் கடன் தள்ளுபடி திட்டம் இருந்தது. ஆனால் பயனாளிகள் பட்டியலில், கடன் தள்ளுபடி தேவைப்படும் விவசாயிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை. வங்காளத்தில் ஒரு பெண்ணை பகிரங்கமாக அடிக்கும் வீடியோவைப் பார்த்தேன். அந்த சகோதரி கதறுகிறார், ஆனால் அவளுக்கு உதவ யாரும் வரவில்லை. வேதனையாக இருக்கிறது. சந்தேஷ்காலியில் நடந்தது பயங்கரமானது.
தங்களை முற்போக்கான பெண் தலைவர்களாக காட்டிக்கொள்பவர்கள் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். ஊழல் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுத் துறைகளுக்கு நான் சுதந்திரம் அளித்துள்ளேன் என்பதை தயக்கமின்றி கூற விரும்புகிறேன். அரசு அதில் தலையிடாது. அவர்கள் நேர்மையாக பணியாற்ற வேண்டும். எந்த ஊழல்வாதியும் பாதுகாப்பாக இருக்க மாட்டார். இதுதான் குடிமக்களுக்கு நான் கூற விரும்பும் மோடியின் கேரண்டி. வினாத்தாள் கசிவு விவகாரத்தில், குற்றவாளிகளை அரசு விடாது என்று இளைஞர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளோம். மணிப்பூர் குறித்து, கடந்த அமர்வில் விரிவாகப் பேசினேன். அங்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. 11,000-க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்கள் குறைந்து வருகின்றன.
எனவே, தற்போது அங்கு அமைதி நிலவுவதாக நம்பலாம். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் இப்போது செயல்படுகின்றன. அங்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. அமைதியை மீட்டெடுக்க, மாநிலமும், மத்திய அரசும் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்து வருகின்றன. முந்தைய அரசுகள் அவ்வாறு செய்யவில்லை. உள்துறை அமைச்சர் பல நாட்கள் அங்கேயே தங்கினார். அதிகாரிகள் அங்கு அடிக்கடி சென்று வருகின்றனர். இன்று மணிப்பூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மாநிலமும், மத்திய அரசும் இணைந்து அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும்.
அங்கு பதற்றத்தைத் தூண்ட முயற்சிக்கும் சக்திகளை மணிப்பூர் நிராகரிக்கும் என்று நான் எச்சரிக்கிறேன். அங்குள்ள மோதலுக்கு ஆழமான வேர்க் காரணங்கள் உள்ளன. மணிப்பூரில் 10 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி விதிக்கப்பட்டதை காங்கிரஸ் மறந்துவிடக் கூடாது. ஆனால், நாங்கள் அதை செய்யவில்லை. 1993-ல், இது போன்ற சம்பவங்கள் நடந்து, அது ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.