நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 240 இடங்களில் வென்ற பா.ஜ.க, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த முறை ஆட்சி அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, நேற்று மாலை நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றார் மோடி. 72 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இன்று டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்றுக்கொண்டதும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டு, தனது அலுவல் பணிகளை துவக்கினார். அதன் அடிப்படையில், இன்று மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மோடி, பிரதமராக முதல் கையெழுத்து போட்டது, விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்புக்கு எனக் கூறப்படுகிறது. அதாவது, பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், 9.2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி ஒதுக்கீடு செய்யும், ரூ. 20,000 கோடி தொகையை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி இன்று கையெழுத்திட்டிருக்கிறார்.