ரஷ்ய அதிபர் புதின் ஆணைப்படி உக்ரைன்மீது கடந்த 2022, பிப்ரவரி 24 முதல் ரஷ்ய ராணுவம் போர் நடத்திவருகிறது. இரண்டாண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்தப் போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் நேரடியாக ரஷ்யாவை வலியுறுத்தியபோதிலும் ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
இந்தியாவும் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் நடுவில் நின்றுகொண்டு, பேச்சுவார்த்தை ஒன்றே இதற்குத் தீர்வு என்று இரண்டாண்டுகளாக கூறிவருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மோடி, இரண்டு நாள் அரசுப் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த நிலையில், வெடிகுண்டுகளுக்கு மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடையாது என புதினிடம் மோடி தெரிவித்திருக்கிறார்.
புதினுடனான தொலைக்காட்சி உரையாடலில் உக்ரைனில் நடந்துகொண்டிருக்கும் போர் குறித்து பேசிய மோடி, “இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. உக்ரைனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் பங்களிக்கத் தயாராக இருக்கிறோம். புதிய தலைமுறையினரின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு, அமைதி மிகவும் அவசியம். ஆனால், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்களுக்கு மத்தியில் அமைதிப் பேச்சு வெற்றிபெறாது.
மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் வேதனையடைகிறார்கள். அதிலும் குறிப்பாக அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது. அப்பாவி குழந்தைகளின் உயிரிழப்பு இதயத்தை உலுக்குகிறது. நேற்றைய சந்திப்பில், உக்ரைன் குறித்த பரஸ்பர கருத்துகளை நாம் கேட்டறிந்தோம். எனவே, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த உலகளாவிய தெற்கின் எதிர்பார்ப்பையும் உங்கள் முன் வைக்கிறேன்” என்று புதினிடம் கூறினார்.