நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி பாசிட்டிவ்வான அம்சங்கள் குறித்து செய்திகள் விரிவாக வெளிவந்துவிட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் நெகட்டிவ்வாக உள்ள விஷயங்களைப் பேசியாக வேண்டிய கட்டாயம் இருக்கவே செய்கிறது.
பா.ஜ.க-வின் கடந்த ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படாததே அதற்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போக ஒரு காரணம் என்பதை உணர்ந்து, இப்போது அதற்கான நடவடிக்கையை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்களுக்கு மானியமாக ரூ.15,000 அளிக்கப்படும் என்கிற அறிவிப்பு ‘அட…’ என்று சொல்ல வைத்தாலும், இந்தப் பணம் நிஜத்தில் எத்தனை பேருக்குக் கிடைக்குமோ?
தவிர, ஒரு கோடி இளைஞர்களுக்கு இந்தியாவின் டாப் 500 தொழில் நிறுவனங் களில் தொழில் பயிற்சி அளித்து, அவர்களுக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகை யாக ரூ.5,000 அளிக்கப்படும் என்கிற அறிவிப்பும் நிஜத்தில் நடக்குமா என்பது சந்தேகமே. காரணம், தனியார் நிறுவனங்கள் இதை செய்துதான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என நிதியமைச்சரே சொன்னபின், எந்த நிறுவனம் இதைச் செயல்படுத்தும்? நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதியில் இருக்கும் பணத்தை இதற்கு செலவு செய்யலாம் என நிதியமைச்சர் சொன்னதை எத்தனை நிறுவனங்கள் கேட்டு நடக்குமோ?
இளைஞர்களின் வேலைத்திறனை (skill) அதிகரிக்க வேண்டும் எனில், உயர்கல்வி நிலையங்களைப் பலப்படுத்தி, அவற்றைத் தொழில் நிறுவனங்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி இருக்க வேண்டுமே தவிர, இந்த மாதிரியான நடவடிக்கைகள் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது என்பது நிச்சயம்.
‘‘பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களின் பெயரையும் சொல்ல வேண்டியதில்லை’’ என நிதியமைச்சர் சொன்னாலும், நம் நாட்டில் பீகாரும், ஆந்திராவும் தவிர வேறு எந்த மாநிலமும் இல்லை என்று நினைக்கும் அளவுக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, பா.ஜ.க-வுக்கு இருக்கும் அரசியல் நிர்ப்பந்தத்தையே காட்டுகிறது. சிலரை சந்தோஷப்படுத்த பலரை வெறுப்பேற்றுவது சரிதானா அமைச்சரே..?
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நன்மைக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இந்த நிதி எதற்கெல்லாம் செலவு செய்யப்படும் என்கிற தெளிவான திட்டம் இல்லை. இதனால் பெண்களுக்கு என்ன நன்மை என்பது அடுத்த ஆண்டுதான் தெரியும்.
ஆக, பொத்தாம் பொதுவான பல அறிவிப்புகளை மிகப் பெரிய விஷயங்கள் போல அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். இந்த அறிவிப்புகள் போகாத ஊருக்கு வழிசொல்லும் பேச்சுக்களாக இருக்கின்றனவே தவிர, ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) என்கிற நிலையை நம் நாடு அடையத் தேவையான அடிப் படையையும் ஊக்கத்தையும் அளிக்கிற மாதிரி இல்லை. பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு நல்ல பட்ஜெட்டை அடுத்த ஆண்டிலாவது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தருவார் என எதிர்பார்ப்போம்!
– ஆசிரியர்