NEET: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்; ராகுல், அகிலேஷ் Vs கல்வியமைச்சர்… பரபரத்த விவாதம்!

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் இன்றுவரை பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது. முக்கியமாக நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மோசடி நடந்திருப்பதாக மாணவர்கள் ஒருபக்கம் போராட்டத்தில் ஈடுபட, உச்ச நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக வழக்கும் நடைபெற்றுவருகிறது.

நீட் (NEET) தேர்வு

அதேசமயம், கடந்த மாதம் தொடங்கிய 18-வது மக்களவையின் முதல் கூட்டத்திலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், விவாதம் நடத்தப்படவில்லை. இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், வினாத்தாள் கசிவு முறைகேடு என மக்களவையில் விட்ட இடத்திலிருந்து எதிர்க்கட்சிகள் தங்கள் வாதத்தைத் தொடங்கின.

அப்போது உரையாற்றிய சமாஜ்வாடி தலைவரும் எம்.பி-யுமான அகிலேஷ் யாதவ், “வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்த அரசு புதிய சாதனைகளை உருவாக்கும். நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். விசாரணையில் ஒவ்வொன்றாக அம்பலமாகின்றன. கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தனது பதவியில் நீடித்தால் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது” என்று கூறினார்.

அகிலேஷ் யாதவ்

அதற்கு உடனடியாக எழுந்து பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால், அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தபோது எத்தனை வினாத்தாள் கசிவுகள் நடந்தன என்ற பட்டியல் என்னிடம் இருக்கிறது” என்றார்.

அவரைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான வாதத்தை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்வு முறையில் ஒரு மிகக் கடுமையான பிரச்னை இருக்கிறது என்பது முழு நாட்டுக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அமைச்சர் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம்சாட்டியிருக்கிறார். இங்கு என்ன நடக்கிறது என்பதன் அடிப்படையை அவர் இன்னும் புரிந்து கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

இங்கு பிரச்னையே, இந்திய தேர்வு முறை ஒரு மோசடி என்று உறுதியாக மில்லியன் கணக்கான மாணவர்கள் நம்புகின்றனர். என்ன நடக்கிறது என்று கவலையில் இருக்கின்றனர். நீங்கள் பணக்காரராக இருந்தால், இந்திய தேர்வு முறையை வாங்கலாம் என்று மில்லியன் கணக்கான மக்கள் நம்புகிறார்கள். எதிர்க்கட்சிகளும் இதையே உணர்கின்றன. இந்த சிக்கலை சரிசெய்ய அரசாங்கம் என்னதான் செய்கிறது” என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “என்னுடைய தொகுதியில் மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. எனவே, நாடாளுமன்றத்தில் யாருடைய நற்சான்றிதழும் எனக்கு வேண்டாம். அதேபோல், நீங்கள் கத்துவதால் பொய்கள் உண்மையாகிவிடாது. நாட்டின் தேர்வு முறை ஒரு குப்பை என்று இங்கு அழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து இதைவிட துரதிஷ்டவசமான அறிக்கை எதுவும் இருக்க முடியாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

2010-ல், கல்விச் சீர்திருத்தங்களுக்கான மூன்று மசோதாக்களை அவர்களின் அமைச்சர் கபில் சிபல் அறிமுகப்படுத்தினார். அவற்றில் ஒன்று, நியாயமற்ற நடைமுறைகளைத் தடுப்பது. இதில் அவர்களின் பிரச்னை என்ன… யாருடைய அழுத்தத்தால் அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அழுத்தம் காரணமா… இப்படியிருக்க, அவர்கள் இன்று எங்களிடம் கேள்வி கேட்கின்றனர். தேசிய தேர்வு முகமை கடந்த ஏழு ஆண்டுகளில் 240-க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தியிருக்கிறது. அதில், 5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இதுவரை வினாத்தாள் கசிவு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. மத்திய அரசு எதையும் மறைக்கவுமில்லை” என்றார்.

இதற்கிடையில், அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிப்பாரா என்று கேட்டதற்கு, “என்னுடைய தலைவரால் நான் இங்கு இருக்கிறேன். எனவே, பொறுப்புக்கூறல் வரும்போதெல்லாம் அரசு அதற்கு கூட்டாகப் பதிலளிக்கும்” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

இந்த வாதங்களெல்லாம் முடிந்த பிறகு, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இதற்கு கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றத்தையும், பிரதமர் மோடியையும் பற்றி பேசிய அவர், இதில் தான் என்ன செய்கிறோம் என்று சொல்ல முடியவில்லை. நீட் தேர்வு இளைஞர்களின் மிக முக்கியமான பிரச்னை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் எப்பொழுதும் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை. எனவே, இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி, அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *