இந்த தீர்ப்பு குறித்துப் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீட்-யுஜி தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாணவர்களுக்கான பின்னடைவல்ல, மாறாகக் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பற்ற அணுகுமுறை, அற்ப அரசியலின் தோல்வி. வினாத்தாள் கசிவுக்கும், ஊழலுக்கும் காங்கிரஸே தந்தை. காங்கிரஸ் கட்சி மத்திய அரசையும் நம்பவில்லை, உச்ச நீதிமன்றத்தையும் நம்பவில்லை.
இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாகக் காங்கிரஸை நிராகரித்துள்ளதால், தோல்வியை ஏற்கக் காங்கிரஸ் போராடி வருகிறது. அரசியல் லாபத்துக்கும், குறைந்து வரும் அரசியல் ஆதிக்கத்தைக் காப்பாற்றவும் காங்கிரஸ் பொய்களையும், அராஜகங்களையும் நாடுகிறது. கார்கே… நீங்களோ, உங்கள் தலைவர் ராகுல் காந்தியோ அல்லது உங்கள் கட்சியோ மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. உங்கள் எதிர்காலம் மற்றும் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.” எனக் குறிப்பிட்டார்.