நீட் தேர்வு முறைகேடு… மழுப்பும் மத்திய அரசு:
நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையும் மத்திய அரசும் மோசடியை மூடி மறைக்க முயற்சி செய்துவருதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கல்வி அமைச்சர் மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நீட் ஊழலை மூடி மறைக்க ஆரம்பித்துள்ளது மோடி அரசு. நீட் தேர்வில் வினாத்தாள் கசியவில்லை என்றால், பீகாரில் வினாத்தாள் கசிவு காரணமாக 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது ஏன்? பாட்னா காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு, (EOU) கல்வி மாஃபியாவுக்கு 30-50 லட்சம் செலுத்தி, ஏற்பாடு செய்யப்பட கும்பல் மூலம் வினாத்தாள் கைமாறியதை அம்பலப்படுத்தவில்லையா?
குஜராத்தின் கோத்ராவில் NEET-UG மோசடி வெடித்து, முறியடிக்கப்படவில்லையா? பயிற்சி மையம் நடத்தும் நபர், ஆசிரியர் மற்றும் மற்றொரு நபர் உட்பட 3 பேர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், குஜராத் காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே 12 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மோடி அரசின் கூற்றுப்படி, நீட் தேர்வில் எந்தத் வினாத்தாள்களும் கசியவில்லை என்றால், ஏன் இந்தக் கைதுகள் செய்யப்பட்டன? இதிலிருந்து என்ன முடிவு எடுக்கப்படுகிறது? மோடி அரசு நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சி செய்ததா அல்லது இப்போது செய்ய முயற்சிக்கிறதா?” என சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், “24 லட்சம் இளைஞர்களின் ஆசைகளை மோடி அரசு நசுக்கியுள்ளது. 24 லட்சம் இளைஞர்கள் நீட் தேர்வில் கலந்து கொண்டு மருத்துவர்களாக ஆவதற்காக, 1 லட்சம் மருத்துவ இடங்களுக்காக இரவு பகலாக கடுமையாக உழைக்கிறார்கள். இந்த 1 லட்சம் இடங்களில், 55,000 இடங்கள் SC, ST, OBC, EWS பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட அரசுக் கல்லூரிகளில் உள்ளன. இம்முறை, மோடி அரசு NTA-ஐ தவறாகப் பயன்படுத்தியதோடு, மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகளில் பெருமளவில் மோசடி செய்துள்ளது, இதன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான கட்-ஆஃப் அதிகரித்துள்ளது. மதிப்பெண்கள், வினாத்தாள்கள் கசிவுகள், மோசடிகள் போன்ற இவர்களுடைய முறைகேடுகளால், தகுதிவாய்ந்த, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் அரசு சேர்க்கை கிடைக்காமல் தடுக்கும் விளையாட்டாகவே தெரிகிறது” என குற்றம்சாட்டியிருக்கிறார்.
அதேபோல தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், “கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் மூலம் சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும். மாநில அரசுகளின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்னைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசின் திறமையின்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றியஅவர்களின் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை கூறியது. இந்த கருணை மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படுகிறது என்றால், உச்ச நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வந்த தீர்ப்பின் அடிப்படையில் வழங்கினோம் என்கிறார்கள். இதற்கு தேசிய தேர்வு முகமை ஆதாரமாக காட்டப்படும் தீர்ப்பு என்பது, 2018-ல் சி.எல்.ஏ.டி (Common Law Admission Test) என்று சொல்லக் கூடிய தேர்விற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். சி.எல்.ஏ.டி தேர்விற்கான தீர்ப்பை நீட் தேர்விற்கு பொருந்தும் வகையில் எடுத்துக் கொண்டு, கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரும் மோசடி. கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இல்லை. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநில மாணவர்களுக்குத்தான் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கலாம் என்ற தகவல், தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்களுக்கும் தெரியவில்லை. இது ஒட்டுமொத்த இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அநீதி!” எனக் கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88