அதன்படி, நடத்தப்பட்ட மறுதேர்வில் பாதிக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத வரவில்லை. இதனால், இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் 33 மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மானுஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மறுதேர்வு நடத்துவதற்கான கோரிக்கையை எதிர்த்த தேசிய தேர்வு முகமை, `இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், மறுதேர்வு நடத்தக் கோருவது சரியல்ல. அவ்வாறு செய்வது, தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களைப் பாதிக்கும்” என்று தெரிவித்தது. இன்னொருபக்கம், மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களின் தரப்பு வழக்கறிஞர், தேர்வுக்கு ஒருநாள் முன்பு வினாத்தாளும், அதற்கான விடைகளும் டெலிகிராம் குழுக்களில் பரப்பப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக பாட்னாவில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் வாதிட்டார்.