2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருவிழா முடிந்து தன்னுடைய மூன்றாவது இன்னிங்க்ஸை தொடங்கிருக்கிறார் பிரதமர் மோடி. இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 71 அமைச்சர்கள் பதவியேற்றிருக்கின்றனர். அமைச்சர்கள் பதவியேற்ற கையோடு அவர்களுடைய பின்னணியை ஆராய்ந்து, ஜனநாயக சீர்திருத்தங்களின் சங்கம் (Association for Democratic Reforms (ADR)) தரவுகளை வெளியிட்டது. அமைச்சர்களின் நிதி பின்னணி, அவர்களின்மீதான குற்ற வழக்குகளின் பின்னணி மற்றும் இதர பின்னணிகள் குறித்து அதில் இடம்பெற்றிருக்கிறது.
அதில் குற்ற வழக்கு பின்னணிகளுடன் மொத்தம் 28 அமைச்சர்கள் இருப்பதாக, இது சதவிகித அடிப்படையில் 39 சதவிகிதமாக இருக்கிறது. அதில் கடுமையான குற்றவியல் வழக்குகள் 27 சதவிகிதம். அதாவது 19 அமைச்சர்கள்மீது கடுமையான குற்றவியல் வழக்குகள் இருக்கின்றன. இந்தக் கடுமையான குற்றவியலின் கீழ் கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் என முக்கிய குற்றங்கள் இடம்பெறும்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் சாந்தனு தாகூர் (மேற்கு வங்காளம்) மீதும், வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் (மேற்கு வங்காளம்) மீதும் கொலை முயற்சி வழக்குகள் இருக்கிறது.
5 அமைச்சர்கள்மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. முதலாவதாக உள்துறை அமைச்சகத்தில் மாநில அமைச்சர் பாண்டி சஞ்சய் குமார் (தெலங்கானா) மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 42 வழக்குகளும், இரண்டாவதாக அமைச்சர் சாந்தனு தாகூர் (மேற்கு வங்காளம்) மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 23 வழக்குகளும், மூன்றாவதாக அமைச்சர் சுகந்தா மஜும்தார் (மேற்கு வங்காளம்) மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 16 வழக்குகளும் இருக்கின்றன.
நான்காவதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுரேஷ் கோபி (கேரளா) மீது 4 வழக்குகளும், ஐந்தாவதாக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம் (ஒடிசா) மீது 3 வழக்குகளும் உள்ளன.
வாக்கு அரசியலில் மிக முக்கியமானது பேச்சு, அவ்வப்போது அந்தப் பேச்சு வாக்குகளுக்காக வெறுப்பு அரசியலாக மாறி விடுவதும் உண்டு. அப்படி வெறுப்பு நோக்கத்துடன் பேசி அதற்காக வழக்கை எதிர்கொள்ளும் அமைச்சர்கள் எண்ணிக்கை 8. அதில் மேல் குறிப்பிட்ட அமைச்சர் பாண்டி சஞ்சய் குமார் (தெலங்கானா), அமைச்சர் சாந்தனு தாகூர் (மேற்கு வங்காளம்), அமைச்சர் சுகந்தா மஜும்தார் (மேற்கு வங்காளம்) மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
2024-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற 71 அமைச்சர்களில், 70 அமைச்சர்களின் சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. மொத்த அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு 107.94 கோடி ருபாய். இதில் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அமைச்சர்கள் எண்ணிக்கை 6. அதில் முதல் இடத்தைப் பிடித்தவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசனி. இவருடைய சொத்து மதிப்பு 5,705 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவருக்கு அடுத்ததாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (பா.ஜ.க). இவருடைய சொத்து மதிப்பு 424 கோடி ரூபாய். மூன்றாவதாக ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி. இவருடைய சொத்து மதிப்பு 217 கோடி ரூபாய். நான்காவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி (பா.ஜ.க). இவருடைய மொத்த சொத்து மதிப்பு 144 கோடி ரூபாய். ஐந்தாவதாக ராவ் இந்திரஜித் சிங் (பா.ஜ.க), அவருடைய சொத்து மதிப்பு 121 கோடி ரூபாய். இறுதியாக அமைச்சர் பியூஷ் கோயல். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 110 கோடி ரூபாய் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2019-ம் ஆண்டு 56 அமைச்சர்களில் 6 பெண்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது. இந்த முறை 71 அமைச்சர்களில் 7 பெண்கள் அமைச்சரவையில் அமர வைக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது, அமைச்சர்களில் 1 சதவிகிதம் மட்டுமே பெண்கள். இளம் அமைச்சர்கள் பட்டியலில், 31 வயதிலிருந்து 40 வயது வரை இருக்கும் அமைச்சர்கள் இருவர் மட்டுமே. 51 முதல் 70 வயதுடைய அமைச்சர்களின் எண்ணிக்கை 47. 71 முதல் 80 வயதுவரை இருக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை 7.
கல்வி தகுதி அடிப்படையில் 12-ம் வகுப்பு நிறைவு செய்த அமைச்சர்கள் 11 பேர், பட்டதாரி அமைச்சர்கள் 14 பேர், தொழில்முறை பட்டதாரி அமைச்சர்கள் 10 பேர், முதுகலை பட்டதாரி அமைச்சர்கள் 26 பேர், முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர்கள் 7 பேர், டிப்ளமோ பட்டம் பெற்ற அமைச்சர்கள் 3 பேர் இருப்பதாக ADR வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.