புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“பா.ஜ.க எதிர்க்கட்சி அரசுகளை, எதிர்க்கட்சி உறுப்பினர்களை, எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது. நாடாளுமன்றத்திலும் பேச விடுவது கிடையாது. நிதி ஆயோக் கூட்டத்திலும் பேச விடுவது கிடையாது. அதையும் மீறி ஏதாவது பேசினால் வழக்கு தொடர்கிறது. இதெல்லாம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க வேண்டும், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு முதலமைச்சர் ஐந்து நிமிடம் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
இன்னும் பத்து நிமிடம் பேச வேண்டும் என்று விரும்பினால் ஏன் அனுமதிக்க கூடாது?. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருக்கும் போது நேஷனல் டெவலப்மென்ட் கவுன்சில் கூட்டம், இன்டேர் ஸ்டேட் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், குஜராத் முதலமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வருவார். அவர் வரும் சித்திரம் இன்னும் “பளிச்’ என்று நினைவில் உள்ளது. விஞ்ஞான் பவனில் முன் வரிசையில் வலது புறம் அமர்ந்திருப்பார். அவருக்கு மைக் தரும்பொழுது 20 நிமிடம், 15 நிமிடம், 25 நிமிடம் என உரையாற்றி இருக்கிறார். எனக்கு அது பூரணமாக நினைவிருக்கிறது. அவர் பேசும்போது யாரும் குறுக்கிடவில்லை. அவரது பேச்சுக்கு இடையூறு செய்து நிறுத்தவில்லை. எதிர்க்கட்சி முதலமைச்சர் தற்போது ஐந்து நிமிடம் பேசினால் என்ன… பத்து நிமிடம் 15 நிமிடம் பேசினால் என்ன. இது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியினை ஒடுக்கும் வழக்கத்தை பா.ஜ.க இன்னும் கைவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார்.