Odisha: ஒடிசாவில் மலர்ந்த தாமரை; புதிய முதல்வருக்குப் புது வீடு பார்க்கும் அதிகாரிகள் – காரணம் என்ன? | Odisha Begins Search For New Official Residence for Incoming Chief Minister.

இத்தகு சூழலில் ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்தோடு புதிதாக பொறுப்பேற்கவுள்ள முதல்வர் தங்குவதற்காக புதிய இல்லம் ஒன்றை தேடும் பணியில் ஒடிசா அரசு இறங்கியுள்ளது. 2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் பதவி விலகும் முதல்வர் நவீன் பட்நாயக், தனது 24 ஆண்டுக்கால பதவிக் காலத்தில், தனது சொந்த இல்லமான “நவீன் நிவாஸில்” இருந்து செயல்பட்டார். இது முதலமைச்சரின் இல்லமாக திறம்பட செயல்பட்டது.

நவீன் பட்நாயக், கடந்த 2000-ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட வீட்டை விட தனது சொந்த வீட்டிலிருந்தே தம்முடைய அரசாங்க அலுவல்களை கவனித்து வந்தார். இந்த முடிவு மாநில அரசியல் வரலாற்றில் ஒரு தனித்துவமான முன்னுதாரணமாக பார்க்கப்பட்டது. ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக, மாநில அரசின் அனைத்து விதமான அலுவல், நிர்வாகப் பணிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பது, மாநில அரசியலில் முக்கிய முடிவுகள் எடுப்பது என எல்லாமே “நவீன் நிவாஸில்” இருந்து நடத்தப்பட்டன. இது அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக்கால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Charan Majhi - மோகன் சரண் மஜிMohan Charan Majhi - மோகன் சரண் மஜி

Mohan Charan Majhi – மோகன் சரண் மஜி

மிக நீண்ட கால முதல்வர் என்ற சாதனையை படைக்க இன்னும் ஒரு மாத கால இடைவெளி இருந்த நிலையில், நவீன் பட்நாயக் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-விடம் படுதோல்வியடைந்தார்.

இச்சூழலில் பதவியேற்பு விழா இன்று 12.06.2024 நடைபெற உள்ள நிலையில், முதல்வர் தங்குவதற்கு ஏதுவான இல்லத்தை தேடுவதற்கான முயற்சிகளை மாநில நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய முதலமைச்சரின் குறைதீர்க்கும் பிரிவு உட்பட காலியாக உள்ள பல அரசு குடியிருப்புகள் பரிசீலனையில் உள்ளதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மாற்றம் உடனடியாக நடைபெறாது எனவும், சகல வசதிகளுமுடைய ஓர்  இடத்தைத் தேர்வு செய்து, அதற்கு தேவையான  புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை செய்த பின்னரே முதல்வர் தங்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

மோகன் சரண் மஜிமோகன் சரண் மஜி

மோகன் சரண் மஜி

இதற்கிடையில், புதிய முதலமைச்சருக்கு தற்காலிக தங்குமிடமாக மாநில அரசின் விருந்தினர் மாளிகையில் இடத்தை தயார் செய்ய மாநில நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, ஹேமானந்தா பிஸ்வால் மற்றும் ஜானகி பல்லப் பட்நாயக் உள்ளிட்ட முன்னாள் முதல்வர்கள், தலைநகரில் உள்ள ஏஜி சதுக்கத்தும் சாலையில் புவனேஸ்வர் கிளப் அருகே அமைந்துள்ள ஒற்றை மாடி கட்டடத்தில் இருந்து செயல்பட்டு வந்தனர். பின்பு 1995-ல் ஜே.பி.பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல்வர் அலுவலகம் இரண்டு மாடிக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது, அதுவே தற்போதைய முதலமைச்சரின் குறைதீர்க்கும் பிரிவு ஆகும். இந்த அமைப்பு கிரிதர் கமங்கின் அதிகாரபூர்வ இல்லமாகவும் பயன்படுத்தப்பட்டது.

பட்நாயக் குடும்பத்தின் அசல் பங்களா கட்டாக்கில் உள்ளது, அங்கு பிஜு பட்நாயக்கின் மூன்று குழந்தைகள் – பிரேம், கீதா மற்றும் நவீன் ஆகியோர் பிறந்தனர். கடந்த ஐந்து தசாப்தங்களாக, ஆனந்த் பவன் பங்களா பராமரிப்பாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. பிஜு பட்நாயக் புதிய தலைநகரில் நவீன் நிவாஸைக் கட்டிய பிறகு, புவனேஸ்வருக்குச் சென்றபோது இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது இந்த பங்களா அருங்காட்சியகமாக செயல்பட்டுவருகிறது. பிஜு பட்நாயக்குக்கு டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையில் ஒரு சொந்த வீடு இருப்பதாகவும், அதனை அவரின் குடும்பத்தின் நிர்வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *