அரசுமுறைப் பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, நேற்று போலந்தைச் சென்றடைந்தார். இதன்மூலம், 1979-ல் அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய்க்குப் பிறகு 45 ஆண்டுகள் கழித்து போலந்து நாட்டுக்குச் சென்ற பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். அதையடுத்து, நேற்றோடு போலந்து பயணத்தை முடித்துக்கொண்ட மோடி, அங்கிருந்து `ரயில் ஃபோர்ஸ் ஒன் (Rail Force One)’ எனும் ரயிலில் 20 மணிநேரம் பயணம் மேற்கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குச் செல்கிறார்.
இதன்மூலம், மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு உக்ரைனில் அடியெடுத்து வைக்கும் முதல் இந்திய பிரதமராகிறார் மோடி. மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறிருக்க, விமானத்துக்குப் பதில் மோடி ஏன் ரயிலில் அதுவும் 20 மணிநேரம் பயணம் மேற்கொள்கிறார் என்பதற்கு முக்கிய காரணம், பாதுகாப்பு.
கடந்த 2022, பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது ரஷ்யா மீது போர் தொடங்கிய நாள்முதல் அங்கு செல்லும் உலக தலைவர்கள் பலரும் ரயில் பயணத்தைத்தான் பிரதானமாகப் பயன்படுத்துகின்றனர். 2022-ல், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், முன்னாள் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி மற்றும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரும் இதே ரயில் ஃபோர்ஸ் ஒன் ரயிலில்தான் உக்ரைன் சென்றனர்.
உக்ரைனில் போர் சூழலுக்கு மத்தியில் உலக தலைவர்கள் ரிஸ்க் எடுத்துச் செல்வதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத அளவுக்கு இந்த ரயில் ஃபோர்ஸ் ஒன் ரயிலும் இருக்கிறது. இந்த ரயிலானது, நடமாடும் நட்சத்திர ஹோட்டல் போல அழகான மற்றும் நவீன உட்புற வசதிகளைக் கொண்டிருக்கிறது. நீண்ட நேர பயணம் என்பதால், ரயிலில் பயணிக்கும் முக்கிய தலைவர்கள் அதிலேயே முக்கியமான கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக பெரிய அளவில் மேஜை, சோஃபா, டிவி மற்றும் நன்றாக ஓய்வெடுப்பதற்கு அதிநவீன படுக்கை வசதிகளும் இதனுள் இருக்கின்றன.
இவையனைத்தையும் விட மிக முக்கியமாக இதில் பயணிக்கும் வி.ஐ.பி – க்களின் பாதுகாப்புக்கு, எத்தகைய சவாலான சூழலையும் சமாளிக்கும் வகையில் இந்த ரயில் ஃபோர்ஸ் ஒன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக்கு மட்டும் பிரத்யேகமாக, கவச ஜன்னல்கள், கண்காணிப்பு அமைப்புகள், பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்வொர்க், சிறப்பு பாதுகாப்புப் பணியாளர்கள் குழு ஆகிய வசதிகள் இந்த ரயிலில் இருக்கிறது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட அனைத்து முக்கிய தலைவர்களும் வெளிநாட்டு பயணங்களுக்கு இந்த ரயிலையே பயன்படுத்துகின்றனர். தற்போது, உக்ரைனுக்கு பயணிக்கும் உலகத் தலைவர்கள், பிரபலங்கள், வி.ஐ.பி-க்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான ரயிலாக இன்று இது இருந்தாலும், 2014-ல் முதல்முதலாக கிரிமியாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த ரயில் உருவாக்கப்பட்டது.
தற்போது உக்ரைனுக்குச் செல்லும் மோடி, கடந்த மாதம் மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களுக்கு மத்தியில் ரஷ்யா சென்று அதிபர் புதினைச் சந்தித்தபோது, `உக்ரைன் பிரச்னைக்குப் போர்க்களத்தில் தீர்வு காண முடியாது. வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை வெற்றியடையாது’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.