கேரள மாநிலம், வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து 2-வது முறையாக எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ராகுல் காந்தி. கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டாலும், வயநாடு தொகுதியில் மட்டும் வென்று எம்.பி-யாக இருந்தார். நடந்துமுடிந்த தேர்தலில் ரேபரேலி தொகுதியிலும் வயநாடு தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளார் ராகுல் காந்தி. வயநாட்டில் 2-வது முறையாக வென்ற பின்னர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று முதன்முறையாக கேரளா வந்தார். வயநாடு தொகுதிக்குச் சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் வயநாட்டில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அதில் கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் பேசுகையில், “இந்த பொதுக்கூட்டத்தில் மகிழ்ச்சியும், வேதனையும் ஒரே சமயத்தில் அனுபவிக்கும் மக்கள் கூடியிருப்பது எனக்கு தெரியும். இந்தியாவின் அரசியலில் நாங்கள் மதிக்கும் ராகுல் காந்தியின் அரசியல் வளர்ச்சி உயரே உயரே சென்றுகொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. அதே சமயம் வயநாட்டை விட்டுவிட்டு ராகுல் காந்தி செல்வதால் எங்கள் மனம் துக்கத்தில் நிறைகிறது.
என்ன ஆனாலும், நம் முன்பு வளர்ச்சி காத்திருக்கிறது. எல்லா மக்களுடனும், மதத்தினருடனும், சமூகத்தினருடனும் ராகுலுக்கு இருந்த தெளிவான பார்வையை மக்கள் ஏற்றுக்கொண்டனர். இந்திய நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் ராகுலின் தனித்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள். ராகுல் காந்தி 16 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து செல்லும்போது, எதற்காக இப்படி நடக்கிறார் என பலரும் கேட்டார்கள். நடந்ததன் பலன் என்னவென்று இப்போது உங்களுக்கு புரிந்ததா… நடந்து செல்லும்போது காங்கிரஸுக்கோ, அவருக்கோ வாக்கு கேட்ட வில்லை. மக்கள் மனதில் அன்பை விதைக்கச் சென்றார்.