“ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்ட பா.ஜ.க மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கக் கூடாது” என எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, `இந்தியா கூட்டணி’ என்ற பெயரில், பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. இந்த முயற்சியில் பாதி வெற்றி என்ற வகையில் பா.ஜ.க-வின் 400 இடங்கள் என்ற இலக்கை முறியடித்து 234 இடங்களில் வென்றது இந்தியா கூட்டணி.
மேலும், காங்கிரஸ் கடந்த 2019 மக்களவைத் தேர்தலை விடவும் கூடுதலாக 47 இடங்களைப் பெற்று 99 இடங்களுடன் மக்களவையில் 10 ஆண்டுகளாக காலியாக இருந்த பிரதான எதிர்க்கட்சி இருக்கையை நிரப்பியது. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். அதேசமயம், 240 இடங்களுடன் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மொத்தமாக 293 இடங்களைப் பெற்று என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைத்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இது நடந்திருந்தால் ராகுல் காந்தி பிரதமராகியிருப்பார்” என காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். 2019-ல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க அரசு நீக்கி மாநிலத்தை இரண்டாகப் பிரித்த பிறகு முதன்முறையாக அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் நேற்று தனது கட்சித் தொண்டர்களை கார்கே சந்தித்தார்.
அப்போது அவர்களிடம் உரையாற்றிய கார்கே, “நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு ஒரு இடம்கூட ஜெயிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் இந்தியா கூட்டணி பல இடங்களில் வென்றிருக்கிறது. ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் தலா 5 இடங்கள் கிடைத்திருந்தால், மொத்தம் 25 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருக்கும். நம் தலைவர் ராகுல் காந்தி பிரதமராகியிருப்பார். எனவே, நாம் கடினமாக உழைக்க வேண்டும். இந்த வெற்றி நமக்கு முக்கியமானது. வேலைசெய்யாமல் பேசிக்கொண்டேயிருந்தால், வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. கட்சித் தொண்டர்கள்மீது மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது” என்று வலியுறுத்தினார்.