மணிப்பூரில் குக்கி – மெய்தி சமூக மக்களுக்கிடையே வெடித்த வன்முறைக் கலவரம் ஒராண்டைக் கடந்தும் நீடிக்கிறது. தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவிருப்பதாக அண்மையில் அறிவித்தார். இதற்கிடையில், ஜூன் 6-ம் தேதி ஜிரிபாமில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த விவசாயி சோய்பம் சரத் சிங் என்பவர் கழுத்தில் காயங்களுடன் இறந்துகிடந்தார். அதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் வன்முறை வெடித்து பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், அஸ்ஸாமில் பெய்து வரும் தொடர் கனமழையால், 28 மாவட்டங்களில் சுமார் 22.70 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால், இன்று மணிப்பூர் புறப்பட்ட ராகுல் காந்தி, பயணத்தின் வழியில், அஸ்ஸாமில் உள்ள காச்சார் மாவட்டத்திற்கு சென்று ஃபுலெட்ரல் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். அவர்களிடம் நிவாரணம் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து மணிப்பூர் சென்றார்.