பட்டியலின (SC), பழங்குடியின (ST) சமூகத்தினரில் மிகவும் நலிவடைந்தவர்களை துணை வகைப்படுத்தி, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
முன்னதாக, கடந்த 2004-ல் SC, ST பிரிவினரில் துணைப் பிரிவு உருவாக்குவதில் ஆந்திரப்பிரதேச அரசுக்கு எதிராக ஈ.வி.சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 341-ன் கீழ் பட்டியலிடப்பட்ட சாதிகள் (SCs) ஒரே மாதிரியான குழு, அதனுள் துணைப் பிரிவு வகைப்படுத்த முடியாது என தீர்ப்பளித்தது.
இவ்வாறிருக்க, கடந்த 2010-ல் பஞ்சாப் அரசு தனது மாநிலத்தில் பட்டியலின இட ஒதுக்கீட்டில் வால்மிகிஸ் மற்றும் மசாபி சீக்கியர்களுக்கு 50 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு கொண்டுவந்தது. ஆனால், இதற்கெதிராக டேவிந்தர் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம், ஈ.வி.சின்னையா வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி பஞ்சாப் அரசின் முடிவை ரத்த செய்தது.