நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் பா.ஜ.க கால்பதிக்கும் வகையில் வென்ற ஒரே பா.ஜ.க எம்.பி சுரேஷ் கோபி. மத்திய அமைச்சர் ஆன கையோடு வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக கோயில்களுக்கு சென்று வழிபடுவது, நேர்த்திக்கடன் செலுத்துவது எ பிசியாக உள்ளார் சுரேஷ் கோபி.
தளி மகாதேவர் ஆலயம் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களில் வழிபாடு நடத்திய சுரேஷ் கோபி திருச்சூரில் உள்ள லூர்து மாதா-வுக்கு இரண்டரை பவுன் தங்க சிலுவை மாலை காணிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர், “நன்றியால் பாடுகிறேன் தெய்வமே…’ என பாடல் பாடி லூர்து மாதாவை வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, “வெற்றிக்கான நன்றி இதயத்தில் உள்ளது. அது பொருட்களில் இல்லை. பக்திக்கான ஒரு அடையாளம்தான் இந்த காணிக்கை” என தெரிவித்தார். திருச்சூர் லூர்து மாதா ஆலயத்தின் மீது சுரேஷ் கோபிக்கு ஏற்கனவே ஈடுபாடும் நம்பிக்கையும் உண்டு. இந்து கோயில்களப்போன்று, லூர்து மாதா வழிபாட்டுத்தலத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வழிபட்டு வருகிறார் சுரேஷ் கோபி.


சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் சில மாதங்கள் முன்பு நடந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். திருமணம் முடிந்த பின்னர் லூர்து மாத வழிபாட்டுத்தலத்துக்கு குடும்பத்துடன் சென்ற சுரேஷ் கோபி லூர்து மாதாவுக்கு தங்க கிரீடம் சமர்ப்பித்து வழிபட்டார். அப்போது அவர் வழங்கிய தங்க கீரீடம் குறித்து விவாதம் கிளம்பியது.
தங்க கிரீடம் என கூறிவிட்டு செம்பு உலோகத்தில் தங்கம் பூசிய கிரீடத்தை சுரேஷ்கோபி வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. அதை எதிர்க்கட்சிகளும் விவாதம் ஆக்கின. இந்த விவாதத்துக்கு சுரேஷ்கோபி கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் தேர்தலுக்கு பின்பு லூர்து மாதா ஆலயத்தில் சுரேஷ்கோபி தங்கத்தில் சிலுவை மாலை சமர்ப்பித்து வழிபட்டுள்ளார்.