அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு!
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அங்கு பிரசாரம் களம் அனல் தகித்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ட்ரம்ப் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆதரவாளர்கள், மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் முன்னாள் அதிபர் ட்ரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போதுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. காதிலிருந்து ரத்தம் சொட்டிய நிலையில் தனது கையை உயர்த்திக் காட்டினார் ட்ரம்ப். அதையடுத்து பாதுகாவலர்கள் அவரை மேடையிலிருந்து மீட்டு அழைத்துச் சென்றனர்.
ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.