அவதூறு வழக்கு; பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகும் ராகுல் காந்தி!
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு செய்தித்தாள்களில் அவதூறான விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறி, கர்நாடக பா.ஜ.க காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது. அப்போது ஆட்சியிலிருந்த பாஜக அரசு பெரிய அளவிலான ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சி அத்தகைய விளம்பரம் செய்தது. அதை எதிர்த்து பாஜக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முன்னதாக கடந்த 1-ம் தேதி, இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரான சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது பேசிய நீதிபதி கே.என்.சிவக்குமார், “ஜூன் 7-ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி ராகுல் காந்தி இன்று ஆஜராகவிருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது. “காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜராவார்” என்று குறிப்பிட்டிருக்கிறது.
இந்த நிலையில், அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும் பொருட்டு, ராகுல் காந்தி பெங்களூருவுக்கு விரைந்திருக்கிறார்.