`இதற்குமேல் என்னிடம் சக்தியில்லை..’ – மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவிப்பு!
பாரிஸில் நடந்துகொண்டிருக்கும் ஒலிம்பிக்கில், மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையையெல்லாம் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நேற்று 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியான நிலையில் இத்தகைய அறிவிப்பு நேற்று வெளியானது பல கோடி இந்தியர்களை கவலையுறச் செய்தது. ஒருபுறம், இதில் சதி இருப்பதாக முன்னாள் வீரர்கள் உட்பட சிலர் கூற, மறுபுறம் பிரதமர் மோடி உட்பட பலரும் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில், இதற்கு மேல் தன்னிடம் சக்தியில்லை என வினேஷ் போகத் திடீரென மல்யுத்தத்திலிருந்து தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இது குறித்து வினேஷ் போகத் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். உங்களின் கனவு, என்னுடைய மன வலிமை எல்லாம் நொறுங்கிவிட்டது. தற்போது இதற்குமேல் என்னிடம் சக்தியில்லை. எனவே, மல்யுத்தத்திலிருந்து (2001 – 2024) விடைபெறுகிறேன். உங்கள் அனைவருக்கும், நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.