ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடி… இன்று புதனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுக்கு அரசு முறை பயணமாகச் சென்றிருக்கிறார். நேற்றைய தினம் ரஷ்யா சென்றடைந்த அவருக்கு, அந்நாட்டுத் துணைப் பிரதமர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி இன்றைய தினம், ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறும் `ரஷ்யா-இந்தியா இடையிலான 22-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், புதினும் சந்திக்கிறார்கள்.
இருவரும் முதலில் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும், பின்னர் இருநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினருடன் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மோடி மூன்றாவது முறை பிரதமராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னர், முதன்முறையாக ரஷ்யா சென்றிருக்கிறார். எனவே, உக்ரைன் போர், இரு நாட்டு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பரஸ்பரம் இருவரும் கலந்தாலோசிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.