Tamil News Live Today: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை..!
தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுவதாகவும், அதன் காரணமாக மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டு, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. எழும்பூர், சென்ட்ரல் தொடங்கி அம்பத்தூர் வரையிலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.