விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு, 2003-ம் ஆண்டு வழக்கில், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது.
முன்னதாக, கடந்த 2003-ல் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக வி.சி.க சார்பில் திருமாவளவன் தலைமையில் காவல்துறை அனுமதியுடன் நடைபெற்ற பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதில், பொது சொத்துகள் சேதமடைந்ததாக போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.
நீதிபதி ஆர்.விஜயகுமாரியின் உத்தரவின்படி, நீதிமன்றத்தில் ஆஜராகாதது மற்றும் மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு வழக்கறிஞர்கள் நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வி.சி.க தரப்பு வழக்கறிஞர்கள் பதில் மனு தாக்கல் செய்யாதது ஆகியவற்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கு ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.