பெரியவர்கள் வண்டி ஓட்டினால் கவனக்குறைவு, பொறுப்பின்மை என்றுகூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்தானால்… அது மற்றவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் நிலைக்குத் தள்ளப்படும்போது – கொஞ்சம் பதற்றமாகவே இருக்கிறது. அண்மையில், புனேவில் நடந்த போர்ஷே கார் விபத்தில், அந்தப் பணக்காரச் சிறுவனைக் காப்பாற்ற எத்தனை ட்விஸ்ட்கள்!
இப்போது 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கும் வகையில், சில கடுமையான விதிமுறைகளை ஜூன் 1-ம் தேதி முதல் அமல்படுத்த இருக்கிறார்கள்.
அதன்படி, 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டும்போது பிடிபட்டால், அந்த வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (Registration Certificate) முதலில் ரத்து செய்யப்படும். மேலும் வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுவதோடு, அந்தச் சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமமே வழங்க முடியாதபடி கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்.
கோவையில் இதற்காக, கண்களில் கறுப்புத் துணி அணிந்து வாகனம் ஓட்டிப் பிரசாரமெல்லாம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் போக்குவரத்து போலீஸார். ‛‛குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? அதைவிடச் சிறுவர்களிடம் வாகனத்தைக் கொடுத்து சாலைகளில் ஓட்டச் செல்வதும் பேராபத்துகளில் கொண்டு போய் விடும். எனவே, பெற்றோர்களே… அப்படிச் செய்யும்பட்சத்தில் உங்கள் மீது போக்குவரத்துச் சட்டம் பாயும்!’’ என்று கோவை ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
இப்படி மாவட்டம் மாவட்டமாகக் காவல்துறையினர் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகமாகப் பிறரை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கடுமையான தண்டனை காத்திருக்கிறது. மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சட்டத்தைப் படிப்படியாக, தமிழக அரசு அமல்படுத்தி வருவதாகத் தகவல்.