TVK: `வாழ்த்து’ செய்தி மூலம் ஹின்ட்(?) – நாம் தமிழர், விசிக-வை அரவணைக்கும் முயற்சியா?!

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் மூலம் மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்து செல்லியிருந்தார் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய். நடிகர் விஜய், இந்த வாழ்த்தின் மூலம் நா.த.க, வி.சி.க-வை தன்னோடு அரவணைக்க முயற்சி செய்கிறாரா என்ற விவாதம் துளிர்விட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரித்தோம்.

விஜய் – சீமான்

நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் சிலர், “வி.சி.க மற்றும் நா.த.க-வை வாழ்த்திய விஜய், மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் பா.ஜ.க-வையோ, தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளை வென்றெடுத்த தி.மு.க கூட்டணியின் பெயரையோ குறிப்பிடவில்லை. இதன்பின்னே நுட்பமான அரசியல் இருக்கலாம்” எனக் கூறினர். தொடர்ந்து பேசியவர்கள், “2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டிருக்கும் விஜய், முதல் தேர்தலிலேயே பெரும் தாக்கம் ஏற்படுத்த கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கவும் தயார் ஆகிவிட்டார். இதுகுறித்து நன்மதிப்பு கொண்ட பிற கட்சிகளின் முக்கிய புள்ளிகளுடன் நேரடியாக விவாதிக்கவும் ஆரம்பித்திருக்கிறார். கூட்டணி அஸ்திரங்களை கையிலெடுப்பதால்தான் வி.சி.க மற்றும் நா.த.க-வுக்கு வாழ்த்து தெரிவித்து நட்பு சக்திகளை அடையாளம் காட்டியிருக்கிறார் என்ற முணுமுணுப்பு த.வெ.க-வில் எழுந்திருக்கிறது. அதேசமயம் அ.தி.மு.க, தி.மு.க மற்றும் தேசியக் கட்சிகளுக்கு எதிரான பாதையில் விஜய் பயணிப்பார் என்பது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் தனியாக அரசியல் செய்ய இரு திராவிட கட்சிகளையும் எதிர்ப்பதை தவிர வேறு வழியும் கிடையாது” என்றனர்.

இவ்விவகாரம் குறித்து பேசிவரும் சீமான், “நான் யாருடனும் கூட்டணி வைக்க முடியாது, ஆனால் தம்பி விஜய் போன்றவர்கள் வரும்போது கூட்டணி வைக்கலாம், கறை படியாத கரங்களுடன் நான் இருக்கிறேன், விஜய்யும் அப்படித்தான் இருக்கிறார். எனவே நாங்கள் இருவரும் சேருவது தப்பில்லை” என்றிருக்கிறார்.

இதுவரை சீமான் மட்டுமே விஜய் குறித்து பேசிவந்த நிலையில், முதல்முறையாக நா.த.க-க்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள் நா.த.க-வினர். விஜய் வாழ்த்தும் அதேவேளையில், மற்ற பிரதான கட்சிகள் நாம் தமிழர் கட்சி பெயரைக் கூட பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை என்பது கவனிக்கதக்கது.

சீமான்

நம்மிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சில, “நாங்கள் கூட்டணி அமைத்தாலும் அது உறுதியாக தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க-வுடன் இருக்காது. மற்றபடி நீங்கள் குறிப்பிடுகிற விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியெல்லாம் எங்கள் எதிரியே கிடையாது. சீமான் மற்றும் திருமாவளவன் ஆகியோர் எங்கள் தலைவரின் `குட் புக்`கில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிப்படையாக வாழ்த்து தெரிவிப்பதெல்லாம் ஒரு ஹின்ட்தான்” என்றனர்.

விஜய்

ஆனால் வி.சி.க-வினரோ, “விஜய் அரசியலை வரவேற்கிறோம். வாழ்த்தியமைக்கு நன்றி தெரிவிக்கிறோம். இப்படியான நகர்வுகளை வைத்து கூட்டணி அமைப்பீர்கள் எனக் கேட்பது உகந்ததல்ல.இப்போது தி.மு.க கூட்டணியிலும், இந்தியா கூட்டணியிலும் முக்கிய அங்கமாக இருக்கிறோம். பா.ஜ.க எதிர்ப்பில் மிக உறுதியாக இருக்கும் வி.சி.க, தற்போதைய நிலைப்பாட்டு விட்டுவிட்டு விஜய்யோடு அணி சேருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.அதேசமயம் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 23 மாதங்கள் இருக்கும்போது இப்போதே அடுத்த தேர்தல்கள் குறித்து பேசுவதும் சரியாக இருக்காது” என்றனர்.

திருமாவளவன்

தேர்தல் வியூக வகுப்பாளர்கள் சிலர், “நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிப்பதை வைத்து கூட்டணி அமையும் என பேசுவது சிறுபிள்ளைதனமாக இருக்கிறது. ஆனால் சீமான் இவ்வளவு அழுத்தமாக விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து பொதுவெளியில் பேசுவதையும் எளிதாக புறந்தள்ள முடியாது. எனவே விஜய்யின் அடுத்த கட்ட நகர்வுகளை பொறுத்தே எதையும் சொல்ல முடியும். தமிழ்தேசியத்தை விஜய் ஏற்பாரா.. விஜய் தலைமையை சீமான் ஏற்பாரா.. சீமான் – விஜய் அணி உருவாகினால் அதனை விடுதலை சிறுத்தைகள் எப்படி அணுகும் என்பதையெல்லாம் இப்போதே கணிக்க முடியாது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *