பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் 650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டனில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. பிரிட்டனைப் பொறுத்தவரை கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி என இரண்டு கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தத் தேர்தலில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்கும், ஆஃப்ரோ அமெரிக்கர்களுக்கும் போட்டியிட அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக இந்தத் தேர்தலில் உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் வேட்பாளராகப் போட்டியிடுகின்றனர். பிரிட்டன் தேர்தலில் தமிழர்கள் அதிகம் பேர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சிதான் ஆட்சிப் பொறுப்பிலிருந்து வருகிறது.
ஆனால் இந்த 15 ஆண்டுகளில் ஏராளமான குளறுபடிகள் நடந்திருக்கின்றன. நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், வெளியான கருத்துக்கணிப்புகளின்படி ரிஷி சுனக்கிற்கு குறைவான அளவு தொகுதிகளே கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ரிஷி சுனக்கிற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. எனவே கன்சர்வேட்டிவ் கட்சி கடும் அதிருப்தியில் இருக்கிறது. இதனிடையே எதிர்க்கட்சி தலைவர் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.