Union Budget தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெயர்கள் இல்லாத பட்ஜெட்; நிர்மலா சீதாராமனின் விளக்கமென்ன?

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, ஆளும் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கான பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. குறிப்பாக, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.40,000 கோடிக்கும் அதிகமாக சிறப்பு நிதி ஒதுக்கியதோடு, பல்வேறு திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதே தற்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

மத்திய பட்ஜெட் – மோடி – நிதிஷ் குமார்

இதன்காரணமாகவே, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், `இது பா.ஜ.க தனது ஆட்சியைத் தக்கவைப்பதற்கான பாரபட்சமான பட்ஜெட். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் பெயர் கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பீகார் மற்றும் ஆந்திராவுக்கான பட்ஜெட்’ என நேற்று முதல் விமர்சித்துவருகிறது.

இந்த நிலையில், ஒரு மாநிலத்தின் பெயர் குறிப்பிடாததால் அந்த மாநிலத்துக்கு அரசின் திட்டங்கள் செல்லாது என்று அர்த்தமில்லை என்றும், இரண்டு மாநிலங்களுக்கான பட்ஜெட் என்று காங்கிரஸ் வேண்டுமென்றே குற்றம்சாட்டுகிறது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, இன்று காலை நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் குறித்து உரையாற்ற நிர்மலா சீதாராமன் வருகை தந்தார். கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே எழுந்து, “இதுவொரு பாரபட்சமான பட்ஜெட்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜக்தீப் தன்கர் – மல்லிகர்ஜுன கார்கே

அவரைத் தொடர்ந்து எழுந்து பேசிய நிர்மலா சீதாராமன், “நேற்றைய பட்ஜெட்டில் நிறைய மாநிலங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லையென்றும், இரண்டு (பீகார், ஆந்திரா) மாநிலங்களைப் பற்றி மட்டுமே பேசியதாகவும் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) கூறுகின்றனர். காங்கிரஸ் இந்த நாட்டில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. பல பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்திருக்கிறது. அனைத்து பட்ஜெட்டுகளிலும், அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிடும் வாய்ப்பு கிடைக்காது என்பது காங்கிரஸுக்கு நன்றாகத் தெரியும்.

கடந்த பிப்ரவரி மற்றும் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிறைய மாநிலங்களின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை. இதில், மகாராஷ்டிராவின் பெயரை நான் குறிப்பிடவில்லை. ஆனால், மகாராஷ்டிராவின் வடாவன் பகுதியில் துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருக்கிறது. இதற்கு, ரூ. 76,000 கோடி நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது, மகாராஷ்டிராவின் பெயரை நான் குறிப்பிடாததால், மகாராஷ்டிரா புறக்கணிக்கப்படுகிறது என்று அர்த்தமா… சில மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடாததால் இந்திய அரசின் திட்டங்கள் அங்கு செல்லாது என்று அர்த்தமா…

நிர்மலா சீதாராமன்

ஆனால், நம் மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சிதான் இது. நான் சவால் விடுகிறேன், காங்கிரஸ் தனது முந்தைய பட்ஜெட்டுகளில் அனைத்து மாநிலங்களையும் குறிப்பிட்டிருக்கிறதா?” என்று கேட்டார்.

நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியதும், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் குரலெழுப்ப, `இங்கு கத்தாதீர்கள். இது கத்துவதற்கான இடமல்ல” என்று சபாநாயகர் ஜக்தீப் தன்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *