மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், பா.ஜ.க அரசு தனது கூட்டணியின் முக்கிய கட்சிகளின் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் பயனளிக்கும் வகையில் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.
இவ்வாறிருக்க, இந்த பட்ஜெட் ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இது குறித்த அறிக்கையில், “மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்திருப்பது வெட்கக்கேடானது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காதது நாட்டு மக்களின் நலன்மீதான பா.ஜ.க அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.