US Elections: டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்… இந்தியாவுடனான அணுகுமுறை எப்படி?!

வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதகளமாகியிருக்கிறது, அமெரிக்க அரசியல் களம். இதில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களம் காண்கிறார். மறுபக்கம் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன்தான் போட்டியில் இருந்தார். இந்த சூழலில்தான் கடந்த 21-ம் தேதி அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து தான் விலகுவதாக பைடன் அறிவித்தார். வயது முதிர்வு, கொரோனா தொற்று போன்றவற்றால் இந்த முடிவை பைடன் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தனது முடிவு குறித்து பைடன், “அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே என் நோக்கம்.

அமெரிக்கா

ஆனால், ஜனநாயக கட்சி, நாட்டின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறேன். 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டபோது, கமலா ஹாரிஸை துணை அதிபராகத் தேர்வுசெய்ய வேண்டும் என்பது என் முடிவாக இருந்தது. தற்போது, அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்க வேண்டும். இதற்கு என் ஆதரவையும், ஒப்புதலையும் வழங்குகிறேன்’ என்று கூறியிருக்கிறார். மேலும் குடியரசு கட்சியை சேர்ந்த பலரின் விருப்பமும் கமலா ஹாரிஸ் போட்டியிட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. எனவே அவர்தான் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்டு ட்ரம்ப், “நேர்மையிலாத ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர். பைடனைவிட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது எளிது” என்று கொதித்திருக்கிறார்.

இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் அல்லது கமலா ஹாரிஸில் யார் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.. அவர்கள் எப்படி இந்தியாவை அணுகுவார்கள் என்கிற கேள்வி எழுகிறது. இதற்கான விடை அமெரிக்க அரசியலில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிக்கும் பட்சத்தில் எளிதாக புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். அதாவது கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில் பிறந்தார். அவரது தாய் இந்தியாவில் பிறந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இந்தியாவின் மீதான பற்று கமலாவுக்கு அதிகமாகவே இருக்கிறது. 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது, இந்திய உணவை சமைத்த கமலா தென்னிந்தியாவைப் பற்றி ஒரு வீடியோவில் பேசியிருந்தார். அவரின் திருமணம் ​​இந்திய, யூத மரபுகள் பின்பற்றப்பட்டன.

டொனால்டு ட்ரம்ப் – ஜோ பைடன்

மேலும் இந்தியாவில் நடந்த சில விஷயங்களில் தனது குரலை பதிவு செய்திருக்கிறார். அதாவது கடந்த 2019-ம் ஆண்டு 370-வது பிரிவை நீக்கியது, இந்திய அரசு. அதற்கு ​​​​ஹாரிஸ், “காஷ்மீர் மக்கள் தனியாக இல்லை என்பதை நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம். நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். சில காலத்திலேயே பிரதமர் மோடியை கோவிட் தொற்றை திறம்பட சமாளித்ததாக வெகுவாக பாராட்டினார். அதேநேரம் இந்தியா, அமெரிக்க உறவை மேம்படுத்த கமலா பெரிய அளவில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் அதிபரானால் கூட இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான். எனவே பைடன் நிர்வாகத்துடன் எப்படியான உறவு இந்தியாவுக்கு இருந்ததோ அதே போன்ற நடவடிக்கைகள்தான் வரும் காலங்களிலும் தொடரும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

மறுபக்கம் ட்ரம்ப் இப்போதே இந்தியாவை தாக்கி பேசி வருகிறார். கடந்த வாரம், மிச்சிகனில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில், “சீனாவில் வணிகம் செய்ய விரும்பினால், இங்கே பொருட்களை தயாரித்து அங்கு அனுப்ப வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். பிறகு அந்த பொருட்கள் மீது 250 சதவீதம் வரி விதிப்பார்கள். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இந்தியாவும் இப்படிதான் செய்தது. 200 சதவீதம் வரி விதிப்பால் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை அங்கு விற்க முடியவில்லை” என இந்தியா மீதான தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகவே போட்டு உடைத்திருந்தார்.

மோடி – ட்ரம்ப்

முன்னதாக அவர் அதிபராக இருந்த காலகட்டத்திலும் ஹார்லி டேவிட்சன் பைக் விவகாரம், காற்று மாசுபாடு போன்ற விஷயங்களில் இந்தியாவுக்கு எதிரான தனது கருத்துக்களை அழுத்தமாகவே பேசியிருந்தார். மேலும் ஹெச்1பி விசா முறையிலும் பல மாற்றங்களைச் செய்திருந்தார். இந்தியா – சீனா இடையேயான மோதலில் இந்தியாவுக்கு சாதகமாக நிற்கவில்லை. ஆகவே இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு நடவடிக்கைகள், காலநிலை போன்றவற்றில் சவால்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக அமெரிக்காவில் நடைபெற்ற ஹவ்டி மோடி எனும் நிகழ்ச்சியில் மோடியிடம் அதீத நெருக்கம் காட்டினார் ட்ரம்ப். அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் வாக்குகளை கவர அவர் நெருக்கம் காட்டியதாக சொல்லப்பட்டது. ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபரானால், இந்திய அமெரிக்க உறவில் ட்ரம்ப் மோடி உறவு முக்கியமானதாக இருக்கும்.

குபேந்திரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “அமெரிக்க அரசியலை பொறுத்தவரையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பிறகு டொனால்டு ட்ரம்ப்க்கு ஆதரவு அதிகரித்துள்ளது. அதேநேரம் கமலா ஹாரிஸூக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. ஆகவே இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை நாம் இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால் கமலா ஹாரிஸூக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். பைடனுக்கும், ட்ரம்ப்க்கும் இடையேயான போட்டி என்பது வேறு. கமலாவுக்கும், ட்ரம்ப்க்கும் இடையேயான போட்டி என்பது வேறு. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை தேர்தலில் நிறுத்த வேண்டும் என பலர் விரும்புகிறார்கள். அப்படி அவர் நின்றால் ட்ரம்ப் வெற்றிபெறுவது மிகவும் கடினம். ஆனால் அவர் தேர்தலில் நிற்க ஆர்வம் காட்டவில்லை. எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *