இந்த ஆண்டு, நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மறுபக்கம் ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆகியோர் களமிறங்குகிறார்கள். ஆரம்பத்தில் ட்ரம்ப் Vs ஜோ பைடன் என்றிருந்த தேர்தல் களம், தற்போது ட்ரம்ப் Vs கமலா ஹாரிஸ் என அனல் தகித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மறைமுகமாக கார்பரேட் நிறுவனங்கள் களத்தில் ஊடுருவுவதாக இரு தரப்பு ஆதரவாளர்களும், சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டிக் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ட்விட்டர் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று, சுமார் 129 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களைக் கடந்து, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எலான் மஸ்க், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு எதிரான சித்திரிக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்திருந்தார். இத்தனைக்கும் அவர் பகிர்ந்த அந்த வீடியோ, மஸ்க்கின் ட்விட்டர் எக்ஸ் தளத்தின் விதிகளை (உண்மைத்தன்மை உறுதி செய்யப்படாத தகவலைப் பகிர்தல்) மீறும் வகையிலிருந்தது. இத்தகைய வீடியோவை பதிவிட்டதன் மூலம், மஸ்க் தன்னுடைய ஆதரவு, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ட்ரம்ப்புக்கு என்பதைப் பதிவுசெய்திருக்கிறார்.
இதற்கிடையில், அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ட்ரம்ப் படுகொலை முயற்சி குறித்த கூகுள் தேடலில் ‘auto complete function’ மூலமாக ட்ரம்ப்பின் பெயர் காட்டப்படவில்லை என்றும், `Assassination of …” என்ற தேடலுக்குப் பிறகு, முந்தைய கொலை முயற்சி நிகழ்வுகளான ரோனல்ட் ரீகன், ட்ருமன், ஜான்.எஃப்.கென்னடி போன்றோரின் பெயர்கள் காட்டப்படுகிறது என்ற தகவல் பரவியது. முந்தைய நிகழ்வுகளே காட்டப்படும்போது, தற்போதைய செய்தி காட்டப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இது ட்ரம்ப் ஆதரவாளர்களின் வெறுப்பை இந்தியாவைச் சேர்ந்த கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சைமீது திருப்பியது.