புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்,
“கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது. நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். நீட், ஜி.எஸ்.டி உள்ளிட்ட விவகாரங்களில் நடிகர் விஜய்யின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். எல்லோரிடமும்தான் தமிழ் பற்று தேசப்பற்று உள்ளது. எனக்கும்தான் தேசியப்பற்று உள்ளது. அவரது கொள்கை என்ன என்பதை விவரிக்க வேண்டும். விஜய் தனது கொடியை அறிமுகப்படுத்தி வைத்தது குறித்து நான் எந்த கருத்தும் கூற முடியாது. தனியாக கட்சி நடத்துவது என்ன என்பது அவருக்கு பட்டால்தான் தெரியும். விஜய்யும் பட்டு தெரிந்து கொள்வார். முதலமைச்சரின் நிவாரண நிதி பாகுபாடின்றி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படும்போது அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு தொகையினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பதே எனது கருத்து. பாலியல் குற்றங்களை அரசு தடுக்க முடியாது. நடந்த பிறகு விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனைதான் பெற்றுக் கொடுக்க முடியும். இதற்கு சமுதாய மாற்றம் அவசியமாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்.