இதே சூழல்தான் இந்த ஆண்டும். ஜூலை கடைசியில்தான் கர்நாடகத்திலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை முழுக்கொள்ளவை எட்டிய பிறகு திறக்கப்பட்ட உபரி நீர், முக்கொம்பு அணையை அடைய, அங்கிருந்து சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் நேரடியாகக் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. அடுத்து, காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரும் கல்லணை வந்துசேர, அங்கிருந்தும் கொள்ளிடத்துக்கே அதிகமாகத் திறக்கப்பட்டது. ஆகக்கூடி, கொள்ளிடத்தில் மட்டும் ஒரு லட்சத்து 28,000 கன அடி நீர் அப்படியே கடலுக்குப் பாய்ந்தோட… காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் சில ஆயிரம் கன அடிகளே கசிந்தன.
உண்மையில் அதிகப்படியான பாசன பகுதிகள் இருப்பதே இந்த காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றை நம்பிதான். இவற்றிலிருந்து பிரியும் சிற்றாறுகள், பெரும் கால்வாய்கள், சிறு கால்வாய்கள் ஆகியவற்றின் வழியாகத்தான் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்ட நிலங்கள் செழிப்படைகின்றன. குளம், குட்டை, ஏரிகள் என நீர்நிலைகள் நிரம்புவதால் நிலத்தடி நீர் பெருகுவதோடு கால்நடைகளுக்கும், மரம் மட்டைகளுக்கும் தேவையான நீர் கிடைக்கிறது.
இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாமல், மொத்தமாக கடலுக்குப் பாய்ந்த தண்ணீரை அமைச்சர்களும் அதிகாரிகளும் பூதூவி வேடிக்கை பார்த்ததுதான், கொடூரத்தின் உச்சம்.
ஒரு விநாடிக்கு ஒரு லட்சத்து 28,000 கன அடி வீதம், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான 5 நாள்களுக்கு மொத்தம் 55 டி.எம்.சி நீர், கொள்ளிடம் வழியாக அப்படியே கடலுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது (உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகா நமக்குத் தரவேண்டிய தண்ணீரின் அளவு, 50 டி.எம்.சி மட்டுமே).
இந்த விஷயம், `பசுமை விகடன்’ முகநூல் பக்கத்திலும், இணைய தளத்திலும் விவசாயிகளின் வேதனை மற்றும் கண்டனக் குரலுடன் ஆகஸ்ட் 4-ம் தேதி அன்று பதிவிடப்பட்டது. ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் முகமூடி கிழிபட்டது. ஆனாலும், கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல், கை தவறி ஒரு குவளை தண்ணீர் கீழே விழுந்து விட்டது என்பதுபோல, மறுநாள் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் கூடுதல் தண்ணீரைத் திறந்துவிட்டு, கமிஷன் கணக்குப் பார்க்க போய் விட்டார்கள். ஆம்… காவிரி டெல்டாவே காய்ந்து கிடக்கும்போது, மொத்த நீரையும் இப்படிக் கடலுக்கு அனுப்பியதன் பின்னணியில் மறைந்திருப்பது கமிஷன் கணக்கு மட்டுமே.