Wayanad: `பிரியங்காவை கேரளாவுக்குப் பிடித்தமானவராக மாற்றுவோம்!' – கேரளா எதிர்க்கட்சித் தலைவர்

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகள் கேரள மாநிலம், வயநாடு தொகுதி எம்.பி-யாக பதவி வகித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வென்றார். வயநாடு தொகுதியில் 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றிபெற்றார். ரேபரேலி தொகுதியில் 3,90,030 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால், எதாவது ஒரு எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் பாரம்பர்யமிக்க தொகுதியான ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த 12-ம் தேதி வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ராகுல் காந்தி. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, எந்த தொகுதியில் எம்.பி-யாக நீடிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், ‘ராகுல் காந்தி வயநாட்டை விட்டு செல்வது வருத்தமாக உள்ளது’ எனக் கூறியிருந்தார். எனவே ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதியில் வரும் இடைத்தேர்தலில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என டெல்லி காங்கிரஸ் தலைமை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் வயநாடு தொகுதி எம்.பி பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார் ராகுல் காந்தி. இனி அவர் ரேபரேலி தொகுதி எம்.பி-யாக இருப்பார். இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, “வயநாடு போராடுவதற்கான ஆற்றலை எனக்கு வழங்கியது. அதை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்” என்றார். ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு தொகுதியில் வரும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடந்த கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வயநாட்டில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி

பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரளா மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து வி.டி.சதீசன் கூறுகையில், “மிகவும் பிரியப்பட்ட வயநாட்டில், எங்களுக்கு மிக மிக பிரியப்பட்ட பிரியங்கா காந்தியை ராகுலும், காங்கிரஸ் கட்சியும் நியமித்துள்ளனர். வயநாட்டுக்கு வரும் பிரியங்கா காந்தியை வரவேற்கிறேன். சரித்திரபூர்வமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பிரியங்கா காந்திக்கு அளித்து, அவரை கேரளாவுக்கு பிடித்தமானவராக மாற்றுவோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *