கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவுடன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது “கேரள மாநிலம் இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு பயங்கரமான சோகம் இது. இந்த விவகாரம் குறித்து டெல்லியிலும், கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் பேசப் போகிறேன். இது வேறு நிலை சோகம். இதை வேறுவிதமாக கையாள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி 100-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தரும். இறந்தவர்களின் எண்ணிக்கை, இடிந்த வீடுகள் மற்றும் மக்களைத் தேடி மீட்பதற்கான அவர்களின் உத்திகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்திருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டார்.