இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் 39,000-க்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போருக்கு உலக நாடுகள் இன்னமும் தீர்வுகாணவில்லை. தற்போதுவரை போர் முடிவுக்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை. உலக நாடுகளின் எச்சரிக்கையை தொடர்ந்தும், ஐ.நா சபையின் கண்டிப்புக்குப் பிறகும், தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதற்கு பதிலடி என ஹமாஸ் அமைப்பும், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பும் எதிர்த்தாக்குதலை நடத்தின.
கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவத் தளபதி ஃபுஆத் சுக்ர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கும் இஸ்ரேல்தான் காரணம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், இது தொடர்பாக இஸ்ரேல் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் மறைவுக்குப் பிறகு, புதிய தலைவராக யாஹ்யா சின்வார் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.