கள்ளச்சாராயம்: `உடனடி நடவடிக்கை… முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை!' – சொல்கிறார் கி.வீரமணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 70-க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடிவருகின்றனர். இதில், முதற்கட்ட நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் என பலரை மாற்றியிருக்கும் தி.மு.க அரசு, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை அளித்துவருகிறது. இன்னொருபக்கம், ஏற்கெனவே கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்தபோதும் தகுந்த நடவடிக்கை எடுக்காத தி.மு.க அரசின் அலட்சியமே இன்று மீண்டும் கள்ளச்சாராயத்தால் 40 பேர் உயிரிழந்ததற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கள்ளக்குறிச்சி… கள்ளச்சாராயம்

இப்படியிருக்க, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கைகள் எடுத்ததற்காக முதல்வர் ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து கி.வீரமணி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சில ஊர்களில் காய்ச்சப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த பலரும் உடல் பாதிப்புக்குள்ளாகி, இதுவரை 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் மருத்துவமனைகளில் உடனடியாகச் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைகளைப் பெற்றும் வருகின்றனர். அவர்களில் சிலர் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் துன்பமான செய்திகளும் வருகின்றன.

இந்தச் செய்தி நேற்று தெரிந்தவுடனேயே, தமிழ்நாடு அரசு குறிப்பாக முதலமைச்சர் மின்னல் வேகத்தில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை நொடியும் தாமதிக்காமல் முனைப்புடன் செய்திருப்பது, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல மனிதநேயர்கள் அனைவருக்குமே ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். இதில் ஆளுமையில் அலட்சியம் காட்டியதாகக் கருதப்படும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), மாவட்ட காவல்துறை அதிகாரி மற்றும் பல பொறுப்பாளர்களை மாற்றி, புதியவர்களை உடனடியாகப் பொறுப்பேற்கச் செய்துள்ளார் முதலமைச்சர்.

கி.வீரமணி

கள்ளச்சாராயம் கல்வராயன் மலைப்பகுதியில் காய்ச்சுவது பல காலமாகவே சில சமூக விரோத சுயநல பேர்வழிகளால் நடைபெறுகிறது என்று பல பொதுநல அமைப்புகள் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றும், அதனைத் தடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், வாங்கி விற்பனை செய்யும் கசடர்களையும் கைதுசெய்து, அறவே அதனைத் தடுத்திட குறிப்பிட்ட அதிகாரிகள் தவறிவிட்டனர் என்ற பேச்சு, அப்பகுதி மக்களிடையே பரவலாக உள்ளது. காவல்துறையில் கடமையாற்றும் பணியாளர்கள் பலர் இருந்தாலும்கூட, கையூட்டின் மயக்கத்தில் கவலையற்று வாழும் சிலரால் அத்துறைக்கும், ஏன் தமிழ்நாடு அரசுக்குமே அவப்பெயர் ஏற்படும் அவலம் உள்ளது.

‘மெத்தனால்‘ வாங்கி, கள்ளச்சாராயத்தில் அதனைக் கலந்துதான் விற்பனை செய்துள்ளனர். உடனடியாக அதனை எங்கெங்கே, யார் யார் எவ்வளவு வாங்கி, எதற்குப் பயன்படுத்தியுள்ளனர் என்பது போன்ற பல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் நிரந்தரமாகவே எங்கெங்கு இப்படி ரகசியமாக இந்தக் கள்ளச்சாராய உற்பத்தி தொழிற்சாலைகளும், விற்பனைகளும் நடைபெறுவதை சல்லடை போட்டு சலிப்பதுபோன்ற ஆய்வுகளைச் செய்ய உடனடியாக திறமையும், நேர்மையும் வாய்ந்த சில காவல்துறை அதிகாரிகளை நமது முதலமைச்சர் நியமித்து, ஆய்வு செய்ய வைப்பதும் அவசரம், அவசியம். மனிதாபிமான பிரச்னையான இதில் அரசியல் தூண்டில் தேவையில்லை.

ஸ்டாலின்

வழக்கம்போல், உடனடியாக அன்றாட அவசரப் பேட்டி அரைவேக்காட்டாளர்கள் சிலர், தி.மு.க ஆட்சிமீது இதுவரை வெறும் வாயைத்தான் மென்றோம்; இந்த அவல் கிடைத்தது என்று நினைத்தால், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத் முதலிய ‘டபுள் என்ஜின்‘ ஆட்சிகளில் எங்கெங்கே இதைவிட அதிகமான எண்ணிக்கையில் கள்ளச்சாராய சாவுகள் நடைபெற்றன என்று சுட்டிக்காட்டிப் பதிலடி தரவேண்டியிருக்கும். அது இப்போது முக்கிய தேவையல்ல.

மாறாக, பாதிக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய குடும்பங்களுக்கு ஆறுதலும், இனிமேல் எங்கும் இதுபோன்ற கொடுமைகள் நிகழாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள், வருமுன்னர் காப்பு நடவடிக்கைகள், காவல்துறை களையெடுப்புகள் முதலியவற்றிற்கு முன்னுரிமை தரவேண்டும். இவற்றையும் கடந்து தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நேர்மையாளர் கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

கி.வீரமணி

அந்த ஆணையம், மூன்று மாதங்களுக்குள் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது, இந்த அரசின் துரித முடிவுக்கும், செயல்பாட்டுக்கும், மக்கள் நலனுக்குமான அக்கறைக்கும் சீரிய எடுத்துக்காட்டாகும். பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நமது ஆறுதலும், இரங்கலும் உரித்தாக்குகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *