சேலம்: ஆபத்தை உணராமல் நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்த சிறுவர்கள் – கைதான பயிற்சியாளர்; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் சேலம், கன்னங்குறிச்சி பகுதியில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை சேலம் டு நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனது மையத்தில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்கேட்டிங் பயிற்சியை பனமரத்துப்பட்டி பிரிவு கஜல் நாயக்கன்பட்டியில் இருந்து ஆண்டலூர் கேட் வரை நடத்தினார்.

இதில், 13 மாணவ மாணவிகள் ஈடுபட்டனர். சுமார் 25 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ளப்பட்ட பயிற்சி தேசிய நெடுஞ்சாலைகளிலேயே நடந்தது. அப்போது லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்ட நிலையில் அவர்களது பெற்றோர்கள் டூவீலரில் வந்தனர். இதனால் சாலை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது. இதனிடையே தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் கேட்டரிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பலரும் இப் பயிற்சியை நடத்திய பயிற்சியாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன்மூலம் மாவட்ட எஸ்.பி அருண் கபிலன் உத்தரவின் பேரில் மல்லூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணை

அஜாக்கிரதையாக தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரபாகரன் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சிறார்களுக்கு எதிரான நடவடிக்கை என்பது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று மதியம் பயிற்சியாளர் பிரபாகரனை போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *