தேர்தல் முடிவுகள், நிதிஷின் நச்சரிப்பு; பரபர பிரதமர் அலுவலகம் – நிறுத்தப்படுகிறதா அக்னிபத் திட்டம்?

கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அழுத்தம், வட மாநிலங்களில் கடும் பின்னடைவைத் தந்த தேர்தல் முடிவுகள் உள்ளிட்டக் காரணங்களால் `அக்னிபத்’ திட்டத்தை மறுஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்திய ராணுவம்

கடந்த 2022 ஜூன் 14-ம் தேதி முப்படைகளின் ஆயுதப் படைகளில் இணைவதற்கான `அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கபடுவார்கள். குறைந்தபட்ச பயிற்சியுடன் வெறும் 4 ஆண்டுக்கால ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடத்தப்படும் இந்தத் திட்டத்தில், பணியமர்த்தப்படும் அக்னி வீரர்களில் 25% வீரர்கள் மட்டுமே திறமையின் அடிப்படையில் நேரடியாக ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதுவும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மட்டும்தான். மீதமுள்ள 75% அக்னி வீரர்கள் அந்த நான்காண்டுக்கான ஊதியத்துடன் விடுவிக்கப்படுவார்கள். வழக்கமாக இந்திய ராணுவ வீரர்களுக்கென்று இருந்து வரும் நீண்டகாலப் பணி, பென்ஷன், முன்னுரிமைகள் என முக்கியமான அடிப்படை நலத் திட்டங்கள் எதுவும் இந்த திட்டத்தின்படி அக்னி வீரர்களுக்கு கிடைக்காது.

மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பால், ராணுவப் பணியை இலட்சியமாகக் கொண்டு தங்களைத் தயார் படுத்திவந்த இலட்சக்கணக்கான இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். குறிப்பாக, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில இளைஞர்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்களில் ஈடுப்பட்டனர். போராட்டம் வன்முறையாக மாற, ரயில்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டன. வட மாநிலங்களில் சுமார் 2,200-க்கும் அதிகமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தீ வைப்பு சம்பவங்கள், ரயில்கள் சேதம், டிக்கெட் முன்பதிவு ரத்து உள்ளிட்ட காரணங்களால் ரயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது. மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் வேதனை தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பல பா.ஜ.க எம்.பிக்களே இந்த திட்டத்துக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

அக்னிபத்

“இந்த திட்டம் மிகப்பெரிய அழிவுத் திட்டம், ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆள்பிடிக்கும் திட்டம், உயிரைப் பணயம் வைத்து நாட்டையே பாதுகாப்பதற்காக ராணுவத்தில் இணையும் வீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லையா?” என காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க என அனைத்து எதிர்கட்சிகளும் விமர்சனம் செய்தன. நாடுமுழுவதும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என குரல்கள் எழுந்தன. ஆனால், மத்திய பா.ஜ.க அரசு இவை எவற்றையும் காதில்வாங்கிக்கொள்ளாமல் திட்டத்தை செயல்படுத்தியது. அதிருப்தியடைந்த இளைஞர்கள் வேறுவழியில்லாமல் அக்னிபத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம்

இந்தநிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட, எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும்’ என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இந்தநிலையில், தேர்தல் முடிவில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்திருந்த வட மாநிலங்களில் பா.ஜ.க பெரும் பின்னடைவை சந்தித்தது. காலங்காலமாக பா.ஜ.க கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் பகுதியளவு தொகுதிகளை பறிகொடுத்தது. இளைஞர்கள் வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு சென்றிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைப் பெறமுடியாமல் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்தது. அந்தக் கூட்டணியில் மிக முக்கியமான அங்கமாக இருப்பவர் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமல்லாமல், அடுத்தாண்டு பீகாரில் சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைத்த கையோடு `அக்னிபத்’ திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார். நிதிஷ்குமார். இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் கே.சி. தியாகி, “அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே அதற்கொரு நல்ல வரவேற்பு என்பதே இல்லை. நாட்டு மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள், குறைபாடுகளைக் குறிப்பிட்டு கடுமையாக எதிர்க்கிறார்கள். அதன் தாக்கத்தை தேர்தலிலும் நாம் கண்டிருக்கிறோம். எனவே இந்த திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்த திட்டம் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டு அதிகபட்சமாக இதை ரத்துசெய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்!” என அதிரடியாக தெரிவித்தார்.

நிதிஷ்குமார் – மோடி

இந்தநிலையில்தான், `அக்னிபத்’ திட்டத்திலுள்ள குறைபாடுகளை சரிசெய்து, சில மாற்றங்களை மேற்கொள்வதற்காக பிரதமர் அலுவலகத்தில் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்துவருகின்றனர். நேற்று தொடங்கி இன்றும் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டதில் மிக மிக்கியமான சில சீர்திருத்தங்கள் அக்னிபத் திட்டத்தில் கொண்டுவரப்படும் என டெல்லி வட்டாரம் தெரிவிக்கிறது. குறிப்பாக, அக்னி வீரர்களுக்கான பயிற்சி காலத்தை நீட்டிப்பது, 4 ஆண்டுகளாக இருக்கும் பணிக்காலத்தை 7 ஆண்டுகளாக அதிகரிப்பது, பழைய ராணுவ வீரர்களுக்கு இருப்பதைப்போன்ற சில சலுகைகள் வழங்குவது, பணியமர்த்தப்படும் அக்னி வீரர்களின் எண்ணிக்கை 25% இருக்கும் நிலையில் அவற்றை 50% – 75% ஆக தக்கவைப்பது உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *