“நம் 40/40 தான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம்!" – ஸ்டாலின் பதில்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 40 மக்களைவைத் தொகுதியிலும் போட்டியிட்டு திமுக கூட்டணி வெற்றிப்பெற்றது. அதைக் கொண்டாடும் வகையிலும், கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையும், தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என தி.மு.க சார்பில் முப்பெரும் விழா கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் வரும் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முப்பெரும் விழா அழைப்பு மடல். செப்டம்பரில்தான் திராவிட கழகத்தின் முப்பெரும் விழா நடைபெறும். ஆனால், கோவையில் ஜூன் 15 அன்று நடைபெறும் விழா அதற்கான முன்னோட்டமாகும்.

ஸ்டாலின்

இந்த விழா தி.மு.க-வுக்கு மட்டுமான விழாவோ; அதன் தோழமைக் கட்சிகளுக்கான விழாவோ மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களின் விழா! அவர்கள் நமக்கு வழங்கியுள்ள மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா! மதவாத அரசியலுக்குக் கடிவாளம் போட்டு – ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்து, நாட்டை வழிநடத்தும் வகையில் நாற்பதுக்கு நாற்பதை நமக்கு வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். அந்த வெற்றியையும், தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையும், 40/40 என்கிற மகத்தான வெற்றிக்கூட்டணிக்குத் தலைமையேற்கும் பொறுப்பேற்ற உங்களில் ஒருவனான எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும்,

கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என, ஜூன் 8-ம் நாள் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஜூன் 15 அன்று கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவித்திருக்கிறார். கழக நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்கள். கலைஞரின் நூற்றாண்டில் அவரது நினைவாகப் பயனுள்ள திட்டங்கள், அவரது பெயரிலான பயன்மிகு கட்டடங்கள் அமைக்கப்பட்டாலும், நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய காணிக்கை, நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி என்பதைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்தேன்.

ஸ்டாலின் ராகுல் காந்தி

கழகத் தலைவர் என்ற முறையில் நான் ஒவ்வொரு நாளும் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளைக் கவனித்து வந்தேன். உடன்பிறப்புகளாம் உங்களுடைய பணிகள் என் எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் இருந்தன. கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் நிச்சயம் இந்த முழுமையான வெற்றியைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கை, அதற்கேற்ற உழைப்பை வழங்கிய உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்குமான பாராட்டை உங்களில் ஒருவன் என்ற முறையில் நான் ஏற்றுக்கொள்ளும் விழாதான் கோவை முப்பெரும்விழா. இது கழக உடன்பிறப்புகளின் உழைப்பைப் பாராட்டுகின்ற விழா. பாராட்டுக்குரியவர்கள் உடன்பிறப்புகள். நன்றிக்குரியவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.

ஓர் இலட்சியக் கூட்டணியின் முழுமையான வெற்றிக்குத் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களும், அதன் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆற்றிய பணிகள் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஒன்றிய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது, நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன லாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழ்நாட்டின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம்.

ஸ்டாலின்

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம். 1957 பொதுத் தேர்தலில் பங்கேற்று மக்களவையில் இரண்டே இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருந்த தி.மு.க-தான், இந்தி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தையும் காப்பாற்றும் வகையில், அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவிடமிருந்து உறுதிமொழியைப் பெற்றுத் தந்தது. தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத் தந்த அந்த உறுதிமொழிதான் இன்றளவிலும் இந்தி ஆதிக்கத்திலிருந்து பெரும்பான்மையான மாநிலங்களைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்கிறது.

1962-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில், ‘நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்’ என்று பேரறிஞர் அண்ணாவின் முழக்கம்தான், மாநில உரிமைகளுக்கான வலிமையான முதல் குரல். அந்த ஒற்றைக் குரலின் தொடர்ச்சியாகத்தான் இன்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்தும் உரிமைக் குரல்கள் ஒலிக்கின்றன. இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வலிமையை உணர்ந்திருக்கும் இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் இனி நாட்டின் வருங்காலத் திசை வழியைத் தீர்மானிக்கும்.

ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நாம் பெற்றுள்ள வெற்றி, இந்தியா கூட்டணிக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்திற்கும் நம்பிக்கையை அளித்திருப்பதால், கோவையில் நம் தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது. மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என்பது போல நினைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து அரசியல் இலாபம் தேடிய கட்சிகளின் உண்மையான நிலை என்ன என்பதைக் கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் அளித்துள்ள வெற்றியின் வாயிலாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.

அதனால்தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. கோவை முப்பெரும் விழாவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். அங்கும் நம் தொடர் வெற்றியினை உறுதி செய்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கும் நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகளில் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணி 221 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.

ஸ்டாலின்

இதுதான் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ்! மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடிப் பயன்களைத் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாம் இருக்கிறோம். அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் தொடரும். அவை சரியான முறையில் மக்களிடம் சென்று சேர்வதையும் அதன் நீண்டகாலப் பயன்களையும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும்.

நாற்பதுக்கு நாற்பது என்று நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்! காணப் போகும் களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லட்டும்!! கோவை குலுங்கிட கொள்கைத் தீரர்களே திரண்டிடுக!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *